Tuesday, June 02, 2009

சுஜாதாவின் பத்து கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Article from : http://www.sureshonline.com/2008/03/சுஜாதாவின்-பத்து-கட்டளைக

Monday, April 20, 2009

கோடையும் அப்படித்தான்...

கோடை வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. Global warming அச்சுறுத்துகிறது. வெயிலில் அரைநாள் பைக்கில் சுற்றினாலே உடம்பு படுத்துவிடுகிறது. பெண்களில் பலருக்கு யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல கோடையின் வருகை அவர்களது உடம்பில் ஏற்படும் மாற்றங்களால் உபாதைகளால் முன்னறியப்படுகிறது. டினோசார் போன்ற அத்தப் பெரிய ஜீவராசிகளே பருவநிலை மாற்றங்களால்தான் செத்து மடிந்தன என்பதை படிக்கும்போது ஒப்புக்கொண்டதைவிட இந்த வெயிலில் அலையும்போது சந்தேகத்துக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோம்.

வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்க 36 வழிகள் என்று நம்முடைய வாரப்பத்திரிகைகள் இலவச இணைப்புகள் வழங்குவார்கள். மோர்,இளநீர்,குளிர்பானங்கள்,தர்ப்பூசணி போன்றவை நம் காவல்தெய்வங்களாக கோடையில் கை கொடுக்கும். இதெல்லாம்விட நிறைய தண்ணீர் குடிப்பதுதான் அவசியம் என்று எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் நமக்குச் சொல்லுவார்கள். (அவர் யார் என்று கேட்கிறீர்களா 'உடலும் உள்ளமும் நலம்தானா?' என்கிற அற்புதமான சிறுநூலை எழுதியவர். உடல் நலம் மனநலம் இரண்டைப்பறியும் ஒருங்கே பேசிவரும் ஒரு சமூக சேவகர்.)

எங்கள் கரிசல்காட்டில் கோடைக்கு பானக்கரம் என்று ஒரு பானம் தயாரிப்பார்கள் கருப்பட்டியும் புளியும் மட்டுமே கரைத்த நீர். என்ன தேவாமிர்தமாக இருக்கும்?அதை விட்டால் புளிச்சாணி என வாய்ச்சொல்லால் வாங்கப்படும் புளிச்ச தண்ணி - இது அரிசிச் சோற்றுப் பானையில் பழைய சோற்றுடன் ஊறி ஊறிப் புளித்த தண்ணீர்தான் கோடையில் இதில் பச்சைத்தண்ணி கலந்து புளிப்பை மட்டுப்படுத்தி கொஞ்சம் உப்பு சேர்த்துக் குடிக்கக் குடிக்க அது கொண்டா கொண்டா என்று சொல்லும். இதன் நாகரீக வடிவம் அல்லது மத்திய தர வர்க்க வடிவம்தான் கலைவாணர் குடிச்சுப் பழகணும் என்று பாடிய நீராகாரம்.

நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருப்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும் கம்பங்கூழ். அந்தத் தள்ளுவண்டிகளைக்கண்டால் நம்ம கால்கள் தாமே அங்கு கொண்டு சென்று நம்மைச் சேர்த்து விடுகின்றன. எல்லா இடங்களிலும் சுத்தமான கூழ் கிடைப்பதாகக் கூற முடியாது. குடித்துப் பார்த்து நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். விவரமில்லாமல் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஒருமுறை கம்பங்கூழ் குடித்து அன்றே புடுங்கிக் கொண்டது. மதுரை என்றால் ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே ஒரு அம்மணி கடை,நெல்லையில் பைபாஸ் ரோட்டில் மதி கூழ் பார் என்று ஜம்பமாக எழுதப்பட்ட தள்ளுவண்டி-பைபாஸ் ரோட்டில்,சைதாப்பேட்டை கோர்ட் அருகே,எக்மோர் ஆஸ்பத்திரி அருகே,சேலம் ஒமலூர் ரோட்டில்- என்று நிறைய கூழ் பார்ட்டிகளோடு சினேகம் வைத்துள்ளேன்.

எங்கே கூழ் குடித்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் கூழமாந்தல் கிராமத்தில் எங்கள் பட்டறை ஒன்றில் காலை உணவாகக் கிடைத்த கூழுக்கு இணையாக சமீப காலத்தில் எங்கும் நான் கூழ் சாப்பிட்டதில்லை. உழைப்பாளி மக்களின் அமிர்தம் அது.

சரி.கதைக்கு வருவோம்.

இந்த வெயிலைத் துச்சமாக மதித்து தார்ச்சாலைகளில் கால்களில் சாக்குக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் ஆண்கள் பெண்கள்,கட்டிடத்தொழிலில் தலையில் சாக்குக் கட்டிக்கொண்டு களத்தில் நிற்பவர்கள் இத்தேசமெங்கும் இக்கோடையில் விவசாயம் இல்ல்லாது ஏதேனும் கூலி வேலை தேடி நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் லட்சோப லட்சம் உழைக்கும் மக்கள் (சாய்நாத்தின் கட்டுரைகளில் தவிர வேறு எங்கும் பாடல் பெறாத இத்தலைமக்கள்- அதிலும் குழைந்தை உழைப்பாளிகள்) வெயிலுக்குப் பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஸ்ட்ரா போட்டு இளநீர்க் குடித்தும் சூடு தணியாத நம்மைப் பார்த்து
சாப்பிடுங்க சார் அதுக்கென்ன நாங்க போய்க்கிட்டு இருக்கோம் ஒரு பக்கமா... என்று சொல்வதுபோல ஒரு காட்சி வந்து வந்து மனதை அறுக்கிறது.இளநீர் தொண்டையில் விக்குகிறது.

நமக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தபடி இடையிடையே தாகத்துக்கு பக்கத்தில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துக்கொண்டு அதற்கும் நம்மிடம் சாரி சொல்வதுபோல சிரித்துக்கொண்டு இளநீர்க்காய்களை வேகவேகமாக வெட்டித்தள்ளும் அந்தப் பெண்மணி வெட்டிய இளநீரை நம்மை நோக்கி நீட்டியபடி நம் பயணம் முழுவதும் கூடவே வந்து கொண்டிருக்கிறாள்.

கோடையும் கூட வர்க்க பேதத்துடன்தான் பூமிக்கு வந்து சேர்கிறது.

Article from : http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_31.html

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…

மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.

குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.

3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

4. குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

5. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.

வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.

6. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

7. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

8. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

9. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.

10. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது - என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும்.

இவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.

Article from : http://xavi.wordpress.com/2009/04/15/kid_food/

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்குப் பாடம்!

அடி மேல் அடி வைத்து, திட்டமிட்டு அரசியலுக்கு வந்த திரையுலக நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அண்மையில் திடீரென குதிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கிறோம்... பிரமிக்கிறோம்! நாம் மட்டுமா... யாருக்காக வந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரங்களும் கூட!

நாமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல முதல்வராகலாம் என்கிற கனவு அவர்களுக்கெல்லாம் இல்லாமல் இராது.

இந்தத் தருணத்தில், அதாவது டிசம்பர் 24- எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், ஒரு விஷயத்தை நினைவுகூறுவதோடு, சுட்டிக்காட்டுவதும் சாலப் பொறுந்தும்.

அது, அரசியலுக்கு வரும் சினிமா நட்சத்திரங்கள் பற்றியதே!

ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அரசியலில் ஈடுபடும், ஈடுபடுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களில் எண்ணிக்கை வெகுவாகனது.

சினிமா நடிகர் அல்லது நடிகையை பேட்டியெடுக்கச் செல்லும் நிருபர்கள் சிலர், 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வியை தவிர்த்தாலே... பலருக்கும் அரசியல் எண்ணம் குறையும் என்பது நையாண்டியாளர்களின் கருத்து!

அரசியலுக்கு வரும் நட்சத்திரங்களில் பலரும் மேடையில் முதலில் உதிர்க்கும் சொல் 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்...'

இதில், தவறேதும் இல்லை..!

ஆனால், எம்.ஜி.ஆர். பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றாமல் போனாலும் கூட அடிப்படையான ஒரு விஷயத்தைப் பின்பற்றினாலே, அடுத்தடுத்து சமூக வாழ்வில் தேர்ச்சி வந்துவிடக்கூடும்.

அதுதான் மனித நேயம்... எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவுகளிலும், புரிகின்ற ஒவ்வொரு காரியங்களிலும், அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் மனிதே நேயம் என்பது பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும்.

ஓர் அரசியல் தலைவருக்கு வேண்டியும் முழுமுதற் தகுதியே மனித நேயம் என்பது.

இந்தத் தகுதி இருந்ததால் தான் எம்.ஜி.ஆரால் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வராக முடிந்தது. இல்லையேல், இரண்டாவது முறை அவரை மக்கள் முதல்வராக்கியிருக்க மாட்டார்கள்.

வசீகரம் வெறும் முகவரியே... மனிதத்துடன் கூடிய ஆட்சியே மக்களுக்கு வேண்டியது!

Article from : http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=580:2008-12-23-19-37-45&catid=18:manitham&Itemid=24

Friday, April 10, 2009

எதிர்மறையான விமர்சனங்களை கையாளுவது எப்படி?

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி".

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

Article from : http://sandhainilavaram.blogspot.com/2009/03/blog-post_06.html

Wednesday, April 08, 2009

விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்

எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்.

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். "எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்." எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, "ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்."

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.

Article from : http://vadakaraivelan.blogspot.com/2009/03/blog-post_30.html

Tuesday, April 07, 2009

முடிந்தும் முடியாத கதைகள் : கடைசி நாட்கள்

இது ஒரு ஜப்பானிய கதை. அநுராகம் வெளியீட்டில் வந்த கதையை விழுது பத்திரிகையில் வெளியிட்டு இருந்தோம். எழுத்தாளர்.கி.ராஜநாராயணன் இந்தக் கதையை படித்து, மிகவும் சிலாகித்துப் பாராட்டினார்.

நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் இப்படி ஒரு சட்டம் இருந்ததாகக் கூறுகிறார்கள். வேலை செய்ய முடியாத வயதான கிழவர்களை தூக்கிக் கொண்டு போய் மலைப்பகுதிகளில் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். இந்தச் சட்டம் அமலில் இருந்த காலத்தில் நடந்த கதை இது.

தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் தந்தைக்கு மிக மிக வயதாகி தள்ளாமை வந்து விட்ட போது மலையில் கொண்டு போய் விட்டுவிட வேண்டிய நேரம் வந்தது. மகனுக்கோ அதில் விருப்பம் இல்லை. ஆனால் அப்படிச் செய்யாவிட்டால் அரச தண்டனை கிடைக்கும். என்ன செய்வது. தந்தையை முதுகில் சுமந்து கொண்டு போனான். இறக்கிவிட வேண்டிய இடம் வந்தது. மனம் உருகியது. தந்தை இங்கே தனியே தவித்து மடிவதா? அவனால் அதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. அவரைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கே திரும்பி வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் குகை போன்ற ஒரு இடத்தை உண்டாக்கி, அதில் யாருக்கும் தெரியாமல் தந்தையை இருக்கச் செய்தான். தினமும் அங்கே உணவைக் கொண்டு போய் கொடுத்து வந்தான்.

ஒருசமயம் மன்னன் ஒரு விசித்திரமான ஆணையிட்டான். பிரஜைகள் ஒவ்வொருவரும் சாம்பலான கயிறு ஒன்றை திரித்துக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் அது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இதைப்பற்றி கேள்விப்பட்ட தந்தை மகனிடம் அதற்கு ஒரு வழி சொன்னார். மகன் அதன்படியே செய்து மன்னனிடம் பாராட்டுப் பெற்றான்.

மற்றொரு சமயம் மன்னன் ஒரு மரக்கொம்பை கொடுத்து அதன் வேர் பாகம் எது? தலை பாகம் எது? என்று கேட்டான். யாராலும் சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் வந்து கேட்டான். அதற்கும் அவர் ஒரு வழி சொன்னார். இந்த தடவையும் மன்னனின் பாராட்டைப் பெற்றான்.

பிறகு சில காலம் கழித்து மன்னன் ஒரு கடினமான பிரச்சினையைக் கூறினான். அடிக்காமலேயே ஒலிக்கக் கூடிய மேளம் ஒன்றைச் செய்து தர வேண்டும் என்றான். இந்த முறையும் யாருக்கும் எந்த யோசனையும் வரவில்லை. மீண்டும் மகன் தந்தையிடம் சென்றான். தந்தை அதற்கும் வழி சொன்னார்.

வியப்படைந்த மன்னன் “உன்னால் எப்படி இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் விடைகாண முடிந்தது” என்று கேட்டான்.

“நான் வயதில் மிகவும் இளையவன். அனுபவமும் இல்லாதவன். இந்த பிரச்சினகளுக்கு விடை தெரியாதவன்.” என்று சொல்லி, தன் தந்தை தன்னுடன் இருக்கும் உண்மையைக் கூறி கண்ணீர் விட்டான்.

மன்னனின் மனம் நெகிழ்ந்தது. “இனி வயதானவர்களை மலைக்குக் கொண்டு போய் விட வேண்டியதில்லை” என்ற் உத்தரவிட்டான்.

அதுமுதல் வய்தானவர்கள் தங்கள் கடைசி நாட்களைத் தங்கள் பிள்ளைகளுடனே மகிழ்ச்சியோடு கழித்தனர். இப்படியாக கதை முடிந்தது.

வயதானவர்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரா என்ற கேள்வியுடன் இன்றும் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது......

சரி...மூன்று பிரச்சினைகளுக்கும் அந்த தந்தை என்ன வழிகள் சொன்னார் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா..! இல்லையென்றால் வயதான மக்களிடம் கேட்டு வாருங்கள்..!

Article from : http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_9760.html

Monday, April 06, 2009

கவலையைக் குறைக்க இரு பட்டியல்

பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனனிடம் அழகாகக் கூறுவான். "வீண் கவலை காணிட வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ".

திருதராஷ்டிரன் கூறியது போல் கவலைப்படுவதற்கு காரணங்களைப் பட்டியல் இடுவது கஷ்டமான காரியம் அல்ல. நம் ஒவ்வொருவரிடமும் நீளமான பட்டியல் இருக்கவே இருக்கிறது. பட்டியலில் ஒன்று குறையும் போது ஒன்பது சேர்ந்து கொண்டு பட்டியல் மேலும் நீள்கிறது.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது. "உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலை". மனித உடல் உள்ள வரை, மனிதனுக்கு உயிர் உள்ள வரை, அவன் கவலைகளை சேர்த்து கடலில் போட்டால் அந்த கடல் அளவும் போதாதாம். செத்தால் தான் நிம்மதி என்று இந்த வழிச் சிந்தனை சொல்கிறது.

இப்படி இருக்கையில் கவலையைக் குறைக்க அல்லது மறக்க மனிதன் எத்தனையோ முயற்சி செய்கிறான். இந்தக் கவலைக் கடலைக் "குடித்தே" குறைக்க நினைப்பவர்கள் உள்ளனர். வேறெதுவும் குறைக்காது என்பது அவர்கள் வாதம். ஆனால் அந்த வாதம் முட்டாள்தனம். போதை தெளிந்து பார்க்கையிலும் கவலைகள் அப்படியே இருக்கும் (போதையால் பிரச்சினைகள் பெருகாமல் இருந்தால்).

அதிகம் கவலைப்படுபவர்களே! உங்கள் கவலையைக் குறைக்க இரு பட்டியல்கள் தயாரியுங்கள். ஒன்று உங்களிடம் உள்ள நல்லவற்றின் பட்டியல். எத்தனையோ பேருக்குக் கிடைக்காத எத்தனையோ நல்லவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதையெல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

"காலில்லாதவனைப் பார்க்கும் வரை செருப்பில்லை என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறியவனைப் போல எத்தனையோ விஷயங்களில் உங்கள் கவலை அர்த்தமில்லாதது என்பதை உணர்வீர்கள்.

ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு.

ஞானி ஒருவர் தன்னிடம் கவலையுடன் வந்த மனிதனின் அறிவுக் கண்களைத் திறக்க நினைத்தார். "உனக்கு கண்கள் இருக்கின்றன. குருடாக இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார். உனக்குக் காது கேட்கிறது. செவிடாக உள்ள லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார்....." என்று ஆரம்பித்து அவனிடம் உள்ளவற்றின் பட்டியலை எல்லாம் சொல்லி அவை இல்லாமல் இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்க்கச் சொன்னார். கடைசியில் "உனக்கு ஒரு அழகான கார் உள்ளது. வாகனமே இல்லாத லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்" என்று முடித்தார்.

ஆனால் கவலை குறையாத அந்த மனிதன் சோகமாகச் சொன்னான். "ஸ்வாமி! என்னிடம் உள்ள அத்தனையும் என் பக்கத்து வீட்டுக்காரனிடமும் இருக்கின்றன. ஆனால் அவனிடம் கூடுதலாக இன்னொரு காரும் இருக்கிறதே?"

இதற்கு என்ன செய்வது? இவன் பார்வை பக்கத்து வீட்டுக்காரனுடன் நின்று விடுகிறது. குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அடுத்தது இரண்டாவது பட்டியல். உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள், துக்கங்கள் என்னென்ன என்பதையும் அந்தப்பட்டியலில் எழுதுங்கள். ஆரம்பத்தில் இதில் எழுத அதிகம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்தப் பட்டியல் போல் நீளமான ஒரு பட்டியலை நீங்கள் தயார் செய்யவே முடியாது. பட்டியலில் எழுதத் தேவையானவற்றைப் பெற நீங்கள் சில இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் சென்று ஒரு முழு உலா வர வேண்டும். அடுத்து ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். இந்த இரு இடங்களிலும் நோயாளிகளையும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்னென்ன என்று உங்களுக்குப் புரியும்.

மேலே சொன்ன கதையில் கூட அந்த மனிதன் தன்னை விட ஒரு கார் அதிகம் உள்ள பக்கத்து வீட்டுக்காரனை மேலோட்டமாகப் பார்க்காமல் உற்று கவனித்தால் அவனிடம் உள்ள எத்தனையோ குறைபாடுகள், பிரச்சினைகள் தன்னிடம் இல்லை என்பதை உணர முடியும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து உழலும் போது மலையாய் தெரியும் கவலைகள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து கவனிக்கும் போது சிறுத்துப் போகின்றன.

யாருக்கும், என்றைக்கும், உள்ள பிரச்சினைகளை விட இல்லாத பிரச்சினைகளே அதிகம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு கவலைப்படும் நீங்கள் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகளின் பட்டியலையும் எடுத்துப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன், எல்லோருடைய எல்லா பிரச்சினைகளயும் பார்க்கும் போது, அவர்களுடைய துக்கங்களை நேரடியாகக் காணும் போது, உங்கள் கவலைகளில் பல அவற்றின் முன் அர்த்தமில்லாமல் போவதைக் காண்பீர்கள்.

துரியோதனனைப் போல் கவலைப்பட நூறு காரணங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விட ஆயிரம் காரணங்கள் உள்ளன என்பதை இந்த இரண்டு பட்டியல்களும் உங்கள் தலையைக் குட்டிச் சொல்லும்.

Article from : http://enganeshan.blogspot.com/2009/04/blog-post.html

Friday, April 03, 2009

இருமலை குணப்படுத்தும் தேன்!

இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மருத்தாக விளங்குகிறது.

'குத்திருமல்' என்று அழைக்கப்படும் தொடர்ந்து இருமலால் அவதியுறும் நபர்களுக்கு, தேன் சிறந்த மருந்தாகும்.

தொடர் இருமலை நிறுத்தும் ஆற்றம் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளின் மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இது தொடர்பாக மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி குத்திருமலில் அவதியுற்ற, குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து இருமல் இருக்கும் 105 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்த குழந்தைகளை 3 பிரிவாக பிரித்து, ஒரு பிரிவு குழந்தைகளுக்கு ஒரு சிரிஞ்ச் அளவு தேனும், இரண்டாவது பிரிவு குழந்தைகளுக்கு அதே அளவிலான இருமல் மருந்தும் கொடுக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு குழந்தைகளுக்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

சிறிது நாட்களுக்குப் பிறகு, இருமல் மருந்தை தொடர்ச்சியாக உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும், தேனை உட்கொண்ட குழந்தைகளுக்கு இருமல் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது.

நமது நாட்டில் பெரும்பாலான நாட்டு மருந்துகளும் சித்த மருந்துகளும் தேனுடன் கலந்து உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பாடுவதில் நாட்டமுள்ளவர்கள், குரல் மேம்படுவதற்கு தேனை உட்கொள்கின்றனர். இவ்வாறு தேனின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Article from : http://in.tamil.yahoo.com/Health/Issues/0903/25/1090325036_1.htm

Thursday, April 02, 2009

உங்கள் மூளை எந்த பக்கம்?

ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்போதுதான் நமது மனநிலையை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி எண் 1: நீங்கள் எப்படிப் பட்ட மனிதர்?

அ. மற்றவர்கள் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும்.
ஆ. சமயத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வேன்.

கேள்வி எண் 2: A = AM என்பது கீழ்கண்டவற்றில் எதனுடன் பொருந்தும்?

அ. P = PM
ஆ. HA = HAM

கேள்வி எண் 3: "வடக்கு - தெற்கு" என்பது எந்த இணையுடன் பொருந்தும்?

அ. மேலே - கீழே
ஆ. கிழக்கு - மேற்கு

கேள்வி எண் 4: 15 மற்றும் 6 ஆகிய எண்களுக்கு உள்ள ஒற்றுமை கீழ்க்கண்ட இணைகளில் எதற்கு உள்ளது?

அ. 23 & 5
ஆ. 23 & 14

கேள்வி எண் 5: "வேலை - விளையாட்டு" கீழ் கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. கட்டுப்பாடு - கட்டுப்பாடு இல்லாத நிலை
ஆ. தேவையான ஒன்று - தேவையில்லாத நிலை

கேள்வி எண் 6: "கோபம் - குரோதம்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. மோசம் - மிக மோசம்
ஆ. அன்பு - காதல்

கேள்வி எண் 7: "தங்கம் - மஞ்சள்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. ராமர் - நீலம்
ஆ. எவர்சில்வர் - வெள்ளை

கேள்வி எண் 8: "I - M " என்பது கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. U - R
ஆ. 9 - 13

கேள்வி எண் 9: நீங்கள் (அதிகம்) எப்படிப் பட்ட மனிதர்?

அ. நான் மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவேன்
ஆ. எனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன்

கேள்வி எண் 10: உங்களுக்கு அதிகம் பிடித்தது?

அ. உருவாக்கும் திறன்
ஆ. தெளிவான மனநிலை

இப்போது உங்கள் விடைகளை சரிபாருங்கள்.

உங்கள் விடைகளில் அதிகம் "அ" விடை வந்திருந்தால் உங்கள் வலது மூளையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பொருள். மாறாக "ஆ" என்று இருந்தால் இடது மூளை அதிகம் வேலை செய்கிறது என்று பொருள்.

இப்போது மூளையின் ஆதிக்கம் குறித்த பலன்களை பார்ப்போம்.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள், கலைத் திறமை, கற்பனைத் திறன் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள், கலைஞர்களாக அதிகம் வெற்றி பெறுவார்கள். வேகமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம், பல சமயங்களில் முன் யோசனை இல்லாத முடிவுகளையே எடுத்திருப்பார்கள். "எமோஷன்" மனநிலை அதிகம் கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை இவர்களால் சரியாக சொல்ல முடியாது.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய பழகிக் கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

இடது பக்க மூளை உள்ளவர்கள் மிகவும் நிதானித்து தர்க்க ரீதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழிற் முறை வல்லுனர்களாக வெற்றி பெறுவார்கள். அதே சமயம் "கலை" உணர்ச்சி இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும். ஒருவித "இயந்திர ரீதியான" வாழ்வு முறையை இவர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களால் அதிகம் விரும்பப் பட மாட்டார்கள்.

இடது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் தங்கள் கவனத்தை "உருவாக்கும் திறனை வளர்க்கும் பொழுது போக்கு அம்சங்களில் (உதாரணமாக வரைதல், எழுதுதல்)" செலுத்தினால் அவர்கள் மன நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.

உருவாக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தாலே ஒருவரின் மூளை சரியாக செயல் படும். அவர் தொழில் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

ஒன்றில்லாத மற்றொன்று உபயோகமில்லாதது. எனவே, உங்களது மூளையில் எந்த பகுதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு, உங்களை நீங்களே திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் வெற்றி காணுங்கள். நன்றி.

பின்குறிப்பு: இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

Article from : http://sandhainilavaram.blogspot.com/2009/04/blog-post.html

Wednesday, April 01, 2009

நீங்கள் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

ஏப்ரல் -1… தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் எல்லாம் உண்மையான புத்திசாலிகளை(அன்று ஒரு நாள் மட்டும்) முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம்(இது எப்படி இருக்கு?). நேரடியாகச் சொல்லவேண்டுமானால், இதை முட்டாள்கள் தினம் என்று சொல்வதைக் காட்டிலும், மற்றவர்களை முட்டாள்களாக்கி மகிழ்ச்சியடைபவர்களின் தினம் என்று சொல்லலாம்.

இங்கே யார் முட்டாள்கள்? யார் புத்திசாலிகள்?

ஏமாற்றுபவர் புத்திசாலி! ஏமாறுபவர் முட்டாள்!

அப்போ தானும் ஏமாறாமல் மற்றவர்களையும் ஏமாற்றாமல் இருப்பவர் முட்டாளா, புத்திசாலியா?

அப்படி பார்த்தால் புத்திசாலிகள் பல நேரங்களில் முட்டாள்களே. முட்டாள்கள் பல நேரங்களில் புத்திசாலிகளே.

முட்டாள்களாக அடிக்கடி சித்திரிக்கப்படுபவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அப்பாவிகளும் முட்டாள்கள் இல்லை. தங்கள் வேலையில், தங்கள் செயலில் அதிகபட்ச புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி நல்ல பெயர் எடுக்கும் இவர்கள், மற்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டாமல் முழி பிதுங்குவதால் அப்பாவிகளாகவும், முட்டாள் என்ற அடைமொழியோடு உலவி வருகிறார்கள்.

புத்திசாலிகளில் நூற்றுக்கு 50 சதவிகிதம் பேர் நல்ல நடிகர்கள். அவர்களுக்கு புத்திசாலிகளாக நடிக்க நன்றாக வரும். (அதுவும் திறமைதானே என்கிறீர்களா?) ஒரு விஷயம் தெரியுமா நல்ல புத்திசாலி முட்டாள் போன்றே தோற்றம் தருகிறார்.அதனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சரி, புத்திசாலிகள் வேறு கெட்டிக்காரர்கள் வேறா?

இது முட்டையா கோழியா போன்ற சிக்கலான பிரச்னை. புத்திசாலிகள் தங்கள் வேலையில், தாங்கள் சார்ந்த இடத்தில் திறமையுடையவர்களாக காட்சி அளிக்கிறார்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடையத் திறமையை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன், அதில் தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்கிறான் பாருங்கள் அவனை கெட்டிக்காரன் என்று வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு அரசியல்வாதிகள் நல்ல உதாரணம். இவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ இல்லையோ கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம் காரியத்தில் கண்ணாய் இருந்து, எப்போதும் அதை தனக்குச் சாதகமாகவே ஆக்குபவர்கள் கெட்டிக்காரர்கள். இவ்விஷயத்தில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் போதாது.

இங்கு திறமை என்பது அடிப்பட்டு நேரத்தை, காலத்தை, மனிதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதத்திற்கு அரியணை ஏறும் அரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது.

புத்திசாலிதனத்திற்கு கெட்டிக்காரத்தனத்திற்கும் நம் திரைத்துறையில் இருநதே உதாரணம் தரலாம்.

ரஜினியும் கமலும் சமகாலத்தவர்களாக இருந்தாலும், ரஜினிக்கு எங்கும், எப்போதும் முதலிடமும், கமலுக்கு அடுத்த இடமும் ஏன் தரப்படுகிறது. நிச்சயமாகச் சொல்லலாம் திரைத்துறை திறமையைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை விட புத்திசாலி இல்லை.

கமல் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும், நட்சத்திரமாக மின்னவும் அதற்குத் தேவையான விஷயங்களைத் தேடித்தேடி அறிந்து சேர்த்துக் கொண்டவர். கலைஞர் குறிப்பிட்டபடி தன்னை கலைஞானியாக காட்டிக்கொள்ள முயல்பவர்.

ரஜினி அப்படியா? இல்லவே இல்லை. அவர் அளவுக்கு அறிந்ததையே போதும் என்று நினைத்தவர். அதையே முதலீடாக ஆக்கி வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றவர். அவரிடம் புத்திசாலித்தனத்தைவிட தன்னம்பிக்கையும், மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ளாத தன்மையும் இருந்தது.

கமல் படங்களில் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். இது பல நேரம் நம்மை குழப்பிவிடும்.
ரஜினியின் எந்தப் படமாவது புரியவில்லை என புகார் வந்ததுண்டா? நன்றாக இல்லை என்று வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் படத்தையும் அவருடைய ரசிகர்கள் ஓட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர் நெஞ்சில் ஒட்டியவர்.
ரஜினியைப் போலவே ரஜினி ரசிகர்கள் சரியா?

கமலைப்போலவே கமல் ரசிகர்கள். ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் தங்கள் தலைவர் படமானாலும் ஒதுக்கி ஓரம் கட்டிவிடுவார்கள்.

ரஜினியைப் போன்ற சாதாரணமானவர்கள் நிறைந்த நாடு இது. இது ரஜினியின் முதலிடத்திற்கு காரணம்.கமலைப் போல அதிகம் சிந்திப்பவர்கள் குறைவாக உள்ள நாடு இது. அதே சமயம், அவருடையத் திறமையை யாரும் மொத்தமாக ஒதுக்கிவிடாமல் இரண்டாம் இடத்தை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரவர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இருவருமே போராட வேண்டும் என்பதுதான் மக்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகம் சங்கதி.

ஆக, கமல் புத்திசாலியாகவும் இருக்கிறார். சில நேரம் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். ரஜினியோ எப்போதுமே கெட்டிக்காரராகவே இருக்கிறார்.

தன்னிடம் உள்ள திறமையை அறியாதவன், தன்னுடைய திறமையைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்தாதவன் முட்டாள்.

தன்னுடையத் திறமையை அறிந்தவன், மேலும் தேவையானத் திறமைகளை வளர்த்துக் கொள்பவன், அதை தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தி வெல்பவன் புத்திசாலி.

அட, திறமையே இல்லாவிட்டாலும் ஏதோ திறமை தனக்குள் ஒளிந்திருப்பதுபோல பாவனை காட்டியாவது உச்சத்தை எட்டுபவன் கெட்டிக்காரன்.

நீங்கள் யார் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

Article from : http://www.tamilvanan.com/content/2009/03/30/april-fools-day-who-are-you/

Monday, March 30, 2009

வாழ்வது என்பது வேறு

அவனது பெயர் ஞாபகம் இல்லை. தேவையும் இல்லை. உங்கள் பெயராக இருக்கலாம். என் பெயராக இருக்கலாம். ஒரு வங்கி ஊழியன். வயது முப்பதுக்கும் மேலே. அம்மா பெங்களூரில் இருக்கிறார்கள். இவனுக்கு மும்பையில் நகர்ப்புறம் தாண்டிய ஒதுக்குப் புறத்தில் தனியே வாசம். இதெல்லாம் இந்தக் கதாபாத்திரம் செய்யப் போகிற காரியத்திற்கு பின்புலம் என்று சொல்லிவிட முடியாது. முக்கியமாக நடுத்தர வர்க்கத்தின் ஒரு நபர்.

பத்திரிக்கைகளில் வரும் விமர்சனங்களை அலட்சியம் செய்து சினிமா நிறைய பார்ப்பான். பெரிய திரைகளில் வரும் உருவங்களில் ஐக்கியமாகி கரைந்து போவான். பத்திரிக்கைகளில் குறுக்கெழுத்து போட்டிகளில் சுவராஸ்யம் உண்டு. எந்த கூடுதலான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஒரு பதவி உயர்வு கூட மறுத்திருக்கிறான். கல்யாணம் என்பதும் அப்படி ஒரு சிட்டையில்தான் அவனிடம் இருக்கிறது. தவணைகளில் டி.வி வாங்கி அறையில் வைத்திருக்கிறான். அதன் வெளிச்சம் வெட்டும் திரைக்கு முன்னாலேயே ஞாயிற்றுக் கிழமை பொழுதெல்லாம் உட்கார்ந்திருப்பான். அவ்வப்பொழுது எலக்ட்ரானிக் வசியத்தின் முக்கிய இரையான சாண்ட்விச் சாப்பிட்டுக்கொள்வான். மற்ற விவரங்கள் எல்லாம் தெளிவாக நினைவில் இல்லை.

அந்த சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகான வாரக் கடைசி நேரம்தான் ஆழமாய் பதிந்து பதற்றம் கொள்ள வைக்கிறது.

அரை நாள் வேலை பார்த்துவிட்டு சினிமா பார்க்கப் போனான். சாத்தியமற்ற ஹீரோத்தனங்கள் அலைமோத வெளியே வந்தான். பக்கத்தில் ஒரு நூலகம் சென்று சில வெளிநாட்டு பத்திரிக்கைகளை மேய்ந்தான். அப்புறம் ஒரு கழைக்கூத்தாடியின் உடல் ஜாலங்களை சிறு கூட்டத்தோடு பார்த்தான். சில்லறையை போட்டுவிட்டு அடுத்த தியேட்டருக்குப் போனான். டிக்கெட் வாங்கி பல வண்ணங்களில் நிறைந்திருந்த சுவரொட்டிகளையும், பிம்பங்களையும் பார்த்துவிட்டு இருட்டுக்குள் நுழைந்தான். மினுங்கிய எத்தனையோ ஜோடி கண்களில் இவனுடையதும் ஒன்றாக இருந்தது.

வெளியே வந்த போது நள்ளிரவாக இருந்தது. வி.டி ஸ்டேஷனுக்கு நடந்தான். நியான் விளக்கு வெளிச்சத்தில் நிழல்கள் நெளிந்தன. எலக்டிரிக் டிரெயினுக்கு அந்த நேரத்திலும் பலர் காத்திருந்தார்கள். கடைசி வண்டியில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டான். இரண்டு மூன்று ஸ்டேஷன்கள் கடப்பதற்குள் பலர் இறங்கிக்கொண்டார்கள்.

கையிலிருந்த ஒரு பத்திரிக்கையில் இருந்து பார்வையை சுழற்றியபோது ஒரு வயதான குருட்டு பிச்சைக்காரன் மட்டுமே தள்ளி இருந்தான்.குறுக்கெழுத்துப் போட்டியில் ஒரு துப்பு கிடைத்தது. வாட்சை பார்த்தான். மணி ஒன்று. இன்னும் பதினைந்து நிமிட பிரயாணம் பாக்கி.

வெளிச்சம் மங்கலாகவும், மஞ்சளாகவும் வெப்பமான காற்றோடும் அங்கிருந்தது. பிச்சைக்காரன் தன்னையே பார்ப்பது போல இருந்தது. பார்வையை மாற்றிக் கொண்டான்.

"..சார்...யாரும் இங்கிருக்கிறார்களா..இந்த ஜன்னலை திறந்து விடுங்களேன்.." அந்த பிச்சைக்காரன் பார்வையால் துழாவிக்கொண்டு கேட்கிறான்.

இவனுக்கு புரியாத நடுக்கமிருந்தது. வண்டியோட்டத்தில் மின்சாரக்கம்பங்கள் நீண்ட வரிசையான சிலுவைகளாக கடந்தன.

"...சார்..இங்கு ஒருத்தர் இருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.." திரும்பவும் அவன்.

இவன் எழுந்து நடந்து ஜன்னலை உயர்த்தினான். பிச்சைக்காரன் நன்றி சொன்ன மாதிரி இருந்தது. திரும்பவும் வந்து பத்திரிக்கையில் புதைந்து கொண்டான். வண்டி சீக்கிரம் போய்ச் சேராதா என்றிருந்தது. பிச்சைக்காரன் எழுந்து வண்டியின் நடுக்கத்தில் சமாளித்து நின்றான். கதவுப்பக்கம் போனான். அதையொட்டிய சுவரில் சாய்ந்து கொண்டான். காற்றில் அவனுடைய கலைந்து கிடந்த முடி அசைவதை இவன் பார்த்தான். வண்டியின் பெரிய அசைவுகளில் அவன் அந்த விளிம்பில் நிற்பது அபாயகரமானதாகப் பட்டது. காற்றுக்காக நிற்கிறான் என்பதும் புரிந்தது.

குறுக்கெழுத்துப் போட்டியில் அடுத்த துப்பு கிடைத்தது. மீதமிருக்கும் ஐந்து நிமிடத்தில் குறுக்கெழுத்துப் போட்டியை முடித்துவிட முடியும் என நினைத்துக்கொண்டான். திரும்பவும் பிச்சைக்காரனை பார்த்தான். எதோ ஒரு நிழல் அவனை உற்றுப் பார்ப்பது போல உறுத்தியது. அவன் தூங்கிவிட்டால் என்னவாகும்?

குறுக்கெழுத்து போட்டியில் மூழ்கினான். திடுமென பத்திரிக்கை காற்றில் முகத்தில் படபடத்து அடித்தது. எதிரே வந்து கொண்டிருந்த இன்னொரு வண்டியின் பெரும் சத்தம். அந்த வண்டி சதுர வெளிச்ச நிழல்களை இவன் மேல் எறிந்தபடி கடந்தது. சட்டென ஒரு ஆழமான அமைதி அங்கு நீடிக்க வளைவில் எதிர் வண்டி மறைந்தது. குறுக்கெழுத்துப் போட்டி தெரிகிற மாதிரி திரும்பவும் பேப்பரை மடித்துக் கொண்டான்.

கடைசி கட்டத்தையும் நிரப்பி நிமிர்ந்த போது பிச்சைக்காரன் கதவருகே இல்லை. உறைந்து போனான். மெல்ல எழுந்து தேடினான். வாசல் காலியாக இருந்தது. பச்சை நிற இருக்கைகள் இவனை அசையாமல் பார்க்க ஒரு காற்றாடி அதன் கழுத்தை சுற்றி வளையங்கள் தெறிக்க ஒடிகொண்டிருந்தது. கைப்பிடிகள் அவை பாட்டுக்கு ஒரு அமானுஷ்ய நிலையில் அசைந்து கொண்டிருந்தன. கதவுக்கு வெளியே தலை எட்டி பார்த்தான். தண்டவளங்கள் வழுக்கி ஓட ஒரு பைத்தியக்காரப் பந்தயத்தில் தோற்றுப் போன மாதிரி வண்டி மெதுவாகிக் கொண்டிருந்தது.

இவன் நடுக்கத்தோடு இருக்கையில் வந்து அமர்ந்தான். பலவீனமாக உணர்ந்தான். வண்டி ஸ்டேஷனுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. இறங்கினான். சில பிரயாணிகள் வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இவன் இருட்டில் எண்ணெய் மண்டிய அந்த சக்கரங்களை பார்த்துக் கொண்டிருந்தான். சாவகாசமான சத்தத்தோடு வண்டி புறப்பட்டது. ஜோடி சிவப்பு வெளிச்சப் புள்ளிகள் முற்றிலும் மறைந்தன. கடைசி மனிதனாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான்.

நீல நிறத்தில் தெரு வெறிச்சோடிக் கிடந்தது. அரவமில்லாத சத்தங்களில் நடந்தான். பழியிலிருந்து தப்பிக்கிறவனாய் தனது தோள்களை அடிக்கடி பார்த்துக் கொண்டான். இதயம் கிடந்து அடிக்க சிறு ஒட்டமெடுத்தான்.

இதுதான் கதை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் வீக் பத்திரிக்கையில் படித்தது. எழுதியவர் புகழ் பெற்ற மராட்டிய எழுத்தாளர் மனோஹர் ஷெட்டி. எப்போது நினைத்தாலும் அவஸ்தையாய் இருக்கிறது.

கண் இழந்த அந்த குருட்டுப் பிச்சைகாரனுக்கும்... குறுக்கெழுத்துப் போட்டிக்காரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு பேரும் அன்று தண்டவாளத்தில் இறந்து போனவர்கள்தான்.

வாழ்வது என்பது வேறு

Article from : http://mathavaraj.blogspot.com/2009/02/blog-post_05.html

Friday, March 27, 2009

நினைவுகள்: சம்சாரம் அது மின்சாரம்

நம் வாழ்க்கையில் எத்தனோ நினைவுகள் தொலந்து போயிருக்கும். தேடித் தேடி ஓடினாலும் கிடைக்காது. எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அதை திரும்ப பெற இயலாது. அந்தக் கால வாழ்க்கையை அனுபவிக்காத இன்றைய நகரவாசிகள் அதிர்ஷ்டமில்லாதவர்கள். இளவயது வாழ்க்கை, நண்பர்கள், விவரம் தெரியாதக் காதல், செல்போன் நச்சரிப்பு இல்லாத அந்த நாள்... திரும்பிவராது... வரவே வராது. அது போன்ற பழைய நினைவுகளை அசைபோடுவது தான் இந்த நினைவுகள்.

18 ஜூலை 1986-சினிமா உலகம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது இப்படி ஒரு வாழ்க்கை, படமாக பாடமாக வருமென்று. A.V.M தயாரிப்பில் விசுவின் கதை வசண இயக்கத்தில் வளிவந்த குடும்பக் காவியம் சம்சாரம் அது மின்சாரம்.

அம்மையப்ப முதலியார் கோதாவரி என்ற அழகு குடும்பத்தில் இருந்து துவங்குகிறது காவியம். விசு,கமலா காமேஷ். அவர்களுக்கு 4 பிள்ளைகளாக ரகுவரன், சந்திரசேகர், காஜாசெரீப், லலிதா.

ரகுவரனின் மனைவியாக லட்சுமி. மகிழ்சியாக போய்க்கொண்டிருக்கும் குடும்படுத்தில் விசுவின் மகள் ரூபத்தில் புயல் வீச ஆரம்பிக்கிறது. விசுவின் மகள் ஒரு கிருத்தவ பையனை (திலீப்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் சோர்ந்து போகும் விசு, டெல்லிகணேசின் மகள் மாதுரியைத் தன் மகன் சந்திரசேகருக்கு திருமணம் செய்து வைக்கிறார். அந்த நேரத்தில் லட்சுமி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல பிரச்சிணை வெடிக்கிறது. ரகுவரனோடு ஏற்படும் மோதலில் வீடு இரண்டாகப் பிரிக்கப் பட்டு நடுவே கோடு போடப்படுகிறது. இந்த நிலையில் வாழப்போன மகள் வாழா வெட்டியாக வீட்டிற்குத் திரும்பிவருகிறார். அதே நேரம் பிரசவத்துக்குப் போன லெட்சுமியும் குழந்தையோடு திரும்பிவந்து தன் கணவனால் சிதறிய குடும்பத்தை ஒன்றினைக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று சுபமாகிறது.

இயக்குனர் விசு எங்கிருந்து சிந்தித்தாரோ இப்படி ஒரு குடும்பத்தை. தொழில் நுட்பங்களே தேவையில்லாத அழகு படம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. கண்ணம்மா என்ற பாத்திரத்தில் வீட்டு வேலைக்காரியாக நடித்த மனோரமா கணகச்சிதம். அவர் வரும் "கண்ணம்மா- கம்முன்னு கெட" காட்சி அந்த காலத்தில் மிகமிக‌ ரசிக்கப்பட்டது. அவரோடு போட்டி போட்டி மோதும் ஆல்பர்ட் பெர்னான்டஸ் ஆக கிஷ்மு. தன் மருமகளிடம் ஓரள‌விற்காவது கண்ணியத்தை எதிர்பார்க்கும் மாமனாராக நடித்திருந்தார். சிவா என்ற கேரக்டரில் அடக்கமான நடிப்பில் சந்திரசேகரும் அசத்தியிருந்தார். குடும்ப மருமகளாக வாழ்ந்தேயிருந்தார் லெட்சுமி. பிரிந்து போன குடும்பத்தை ஒன்றினைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் அருமை. மக்களால் மிகமிக ரசிக்கப்பட்டன. படத்தின் மிக முக்கியமான உயிரோட்டமே ரகுவரன் தான்.

சிதம்பரம் என்ற பாத்திரத்தில் அலப்பறை கொடுத்திருந்தார். ஒரு காட்சியில்

விசு: " நம்ம குடும்பம் என்ற கப்பல் மூழ்கிகிட்டு இருக்குப்பா"

ரகு : "அப்டின்னா கடல்ல குதிச்சி தப்பிக்க வேண்டியது தானே"

விசு: "எப்டிப்பா முடியும் நான் இந்த கப்பலோட கேப்டன்"

ரகு : "ஆனா நான் சாதரண பயணி,எனக்கு நீச்சலும் தெரியும்" என்பார்.

இது போன்ற வசனங்கள் இன்றெல்லாம் எங்குமே காணமுடியாது. சங்கர் கனேஷ் இசையில் அனைத்துப் பாடல்களுமே பிரபலம். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், ஜானகிதேவி, ஊரத்தெரிஞ்சிகிட்டேன் பாடல்கள் ஒலிக்காத இல்லங்களே இல்லையெனலாம். அன்றைக்கு திரைவிமர்சனங்கள், தனியார் தொலைக்காட்சி டிரைலர்கள் போன்ற எந்த விளம்பரங்களும் இல்லாமலேயே இந்தப் படம் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் கதை வசண ஆடியோ கேசட்கள் 2 லட்சம் விற்றுத்தீர்ந்தாக‌ சொல்லி நினைவிருக்கிறது. சென்னையில் தேவி தியேட்டரில் ஓடியதாக நினைக்கிறேன். தயவு செய்து சென்னைவாசிகள் யாராவது இதை உறுதிப் படுத்தவும்.

-ராயப்பேட்டை ராமு

Article from : http://kaludai.blogspot.com/2009/03/blog-post_5122.html

Thursday, March 26, 2009

உணர்ச்சி

நண்பர் ஒருவர் வீட்டிற்கு போகிறோம் அல்லது வேலை விஷயமாக மற்றொருவரை சந்திக்கப் போகிறோம். அவர் நம்மை மதிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். நமது கெளரவம் பாழ்பட்டதாக புல‌ம்புகிறோம். நரம்புகள் விம்மிப் புடைக்கும் அளவுக்கு கோபப்படுகிறோம். நாம் சந்தித்த மனிதரை திட்டுகிறோம், பழிவாங்கத் துடிக்கிறோம். ஏன் இந்தக் கோபம், துடிப்பு, உணர்ச்சி வசப்படுதல்? நீங்கள் நீங்களாகவே தான் இருக்கிறீர்கள். மற்றவர் மரியாதை கொடுப்பதினாலோ அல்லது புகழ்வதினாலோ எதுவும் நடக்கப் போவது இல்லை. அது ஒரு சிறு சம்பவம் அல்லது நிகழ்ச்சி.

உதாரணமாக, தத்துவஞானி சாக்ரடீஸ் தன் நண்பருடன் நின்று உரையாடிக் கொண்டிருந்த போது சாக்ரடீஸின் மனைவி முதலில் குப்பையைய் மேல் மாடியில் இருந்து அவர் தலையில் கொட்டினார். சற்று நேரம் கழித்து ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வந்து அவர் தலையில் உயரே இருந்து ஊற்றினார். சாக்ரடீஸ் சமாதானமாகக் கூறினார், "முன்பு இடி இடித்தது, இப்பொழுது மழை பொழிகிறது" என்று. இந்த வெளி விஷயம் சாக்ரடீஸின் உள்ளத்தைப் பாதிக்க வில்லை. விஷயங்களில் அதற்குள்ளாக நன்மை, தீமை ஏதும் இல்லை. நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நம் உணர்ச்சிகள் புறப்படுகின்றன.

ஜென் மதக் கதை ஒன்று, குரு தனது சீடருடன் உணவிற்காக வீடு வீடாகச் சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டில் பெண்மணி வெளியே வந்து குருவைப் பார்த்து திட்டி விட்டு சென்று விட்டார். சீடர் உடனே அந்தப் பெண்மணியைய் பார்த்து கோபப்பட்டார். உடனே குரு சீடரை அமைதியாக அழைத்துச் சென்று இப்பொழுது முதல் இந்த தட்டை நீயே வைத்துக் கொள் என்று கூறி விட்டார். அன்று இரவு சீடனை அழைத்து இப்பொழுது இந்த தட்டு யாருடையது என்று கேட்டார். சீடரின் பதில்… இது என்னுடையது என்றார். காலையில் எப்படி என்னுடையதாக இருந்த இந்த தட்டு மாலையில் நீங்கள் ஏற்றுக் கொண்டவுடன் உங்களுடையதாக மாறியதோ அதே போலத்தான் அந்த பெண்மணி திட்டிய பொழுது திட்டியது என்னையே என்று ஏற்றுக் கொள்ளாதவரை அந்த பெண்மணி கூறிய கடுஞ்சொற்கள் யாவும் அந்தப் பெண்மணியையே சாறும் என்று குரு சீடனுக்கு அறிவுரை கூறினார்.

"எல்லாம் ஒரு சொல்லை, ஒரு சம்பவத்தை, ஒரு பிரச்சனையைய் எப்படிஎடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது".

Article from : http://anudhinam.blogspot.com/2009/03/blog-post_328.html

Tuesday, March 24, 2009

கத்தாதீர்கள்… கவனியுங்கள்..!!

நெருங்கிய உறவான கணவன்- மனைவிக்கிடையே வார்த்தைகள் தடிப்பதற்கும், பிரச்சினைகள் வெடிப்பதற்கும் சூழல் ஒரு முக்கியக் காரணமாகிறது. எந்தெந்தச் சூழலில் எப்படி நடக்கலாம் என்பதற்கான சில ஆலோசனைகள் இங்கே…

சூழ்நிலை 1:அலுவலகத்தில் அன்று உங்களுக்குப் போதாத வேளை. அதே வெறுப்புடன் வீட்டுக்கு நீங்கள் வருகிறீர்கள். துணையிடம் அந்தக் கோப வெறுப்பைக் காட்டுகிறீர்கள்.

ஏன் இப்படி…?: அலுவலகப் பணியில், தொழிலில் ஏற்படும் எந்த நெருக்கடியும் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு மனிதனும் தனது அலுவல் ரீதியான மனநிலையிலிருந்து உடனடியாகத் தனிப்பட்ட வாழ்க்கைக்கான மனநிலைக்கு மாற வேண்டியுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?: உங்கள் துணைவரின் வேலையைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு கருத்துகளைக் கூறாதீர்கள். துணை உங்களிடம் காரணமின்றிக் கோபப்பட்டாலும் நீங்கள் பதிலுக்குக் கத்தாதீர்கள். மாறாக அமைதியாகக் கவனியுங்கள். ஒருவேளை அவர் (அவள்) தனது வேலையை பாதுகாப்பில்லாமல் உணரலாம். நீங்களாக முன்கூட்டியே முடிவு கூறாமல் துணைவரை மனந்திறந்து பேச ஊக்குவியுங்கள். நீங்கள் சில நேரங்களில் `உம்மணாம்மூஞ்சி’யாகவோ, ஆர்வமில்லாமலோ இருப்பது போலத்தானே உங்களின் துணைவரும் இருப்பார்?

சூழ்நிலை 2: உங்களின் நெருக்கடியான சூழல் காரணமாக `ரொமான்ஸுக்கு’ சிறிதளவே நேரம் கிடைக்கலாம். அந்தச் சிறிதுநேரத்தையும் நீங்கள் சண்டையில் கழிக்க நேரலாம்.

ஏன் இப்படி…?: இன்றைய உறவுகளில் நெருக்கத்தைக் குறைப்பதில், குலைப்பதில் நேரத்துக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. நீங்கள் அலுவலகம் முடிந்து வீட்டில் இருக்கும் 2- 3 மணி நேரத்தில் உங்கள் குழந்தையுடன் விளையாட வேண்டும் அல்லது பிள்ளைகளுடன் பேச வேண்டும், டி.வி. பார்க்க வேண்டும், கணவன் அல்லது மனைவி சொல்பவற்றுக்குக் காது கொடுக்க வேண்டும், பின்னர் படுக்கை அறையிலும் நேரத்தைச் செலவழிக்க வேண்டும். இப்படி அடுத்தடுத்து நெருக்கடி.

என்ன செய்ய வேண்டும்?: வெளியிலிருந்து துணைவர் வந்த முதல் அரைமணி நேரத்துக்குள் பிரச்சினை எதையும் பேசக் கூடாது. அவரது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கோரிக்கைகள், வேண்டுகோள்களை அடுக்கக்கூடாது. நீங்கள் தீவிரமாகக் குற்றஞ்சாட்டத் தொடங்கும்போது உங்கள் துணைவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளில்தான் ஈடுபடுவார். சிறு உரையாடலே பெரிய சண்டையாக முற்றலாம். பழைய விஷயங்களைத் தோண்டித் துருவி குற்றம் கூறாதீர்கள். அதனால் பயனேதும் இல்லை. உங்கள் துணைவர் `ரிலாக்ஸ்’ ஆவதற்கு நேரம் கொடுங்கள். இருவரும் டீ, காபி அருந்தியபடி இதமாகப் பேசுங்கள்.

சூழ்நிலை 3: உங்கள் கணவன் அல்லது மனைவியின் சொந்தக்காரர்களுடன் உங்களால் ஒத்துப் போகமுடியாமல் இருப்பது. உங்கள் துணைவர் உங்களை விட அவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் என்று எண்ணுவது.

ஏன் இப்படி…?: தம்பதிகளுக்கு இடையே பிளவு, பிரச்சினை ஏற்படுவதற்குச் சில நேரங்களில் இரு வீட்டார் அல்லது உறவினர்களே காரணமாக அமைகின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள் நலன்களைத் தற்காத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அதுவே தம்பதிகளுக்கு இடையே உரசலுக்கு வித்திட்டு விடுகிறது.

என்ன செய்யவேண்டும்?: உங்கள் அம்மா அல்லது மாமியார் சொல்லும் அனைத்தையும் நம்பாதீர்கள். ஒரு பக்கக் கருத்தை மட்டும் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வராதீர்கள். உறவினர்களின் குற்றச்சாட்டுகளை நீங்கள் உங்கள் துணைவர் உடனான மோதலில் ஆயுதமாகப் பயன்படுத்தாதீர்கள். மாமனார், மாமìயாரின் கருத்தில், செயல்பாட்டில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றாலும், அதற்காக அவர்களை அவமரியாதை செய்யாதீர்கள். இதமான வார்த்தைகளில் உங்களின் விருப்பமின்மை, அதிருப்தியைத் தெரிவியுங்கள்.

Article from : http://www.dinasari.com/?p=437

Monday, March 23, 2009

எஸ்.. 5 எஸ்.!

5 S என்றால் என்ன?

நேரமாக நேரமாக டென்ஷன் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அழுகையே வந்துவிடும் போலயிருந்தது. குளித்து அவசர அவசரமாக கிளம்பியதில் வேர்த்து கன்னங்களில் வியர்வை வழிகிறது. கசகசப்பு. அரைமணி நேரமாகத் தேடியும் கிடைக்கவில்லை பைக் சாவி.. கோபத்தில் ரமாவைக் கத்தினேன். "எங்கே போய்த் தொலைந்தது?" இடுப்பில் கைவைத்துக் கொண்டு பதிலுக்குக் கத்தலாமா, அல்லது உதவி செய்யலாமா என்ற குழப்பத்தில் என்னைப் பார்க்கிறாள் ரமா.

வீட்டையே தலைகீழாக புரட்டிப் பார்த்தாயிற்று. டாய்லெட்டில் கூட செக் பண்ணியாச்சு. "அங்கே எப்படிங்க போகும்? இன்னிக்கு ஒரு நாள் ஆட்டோவில் போய்த் தொலைங்க.. சாய்ங்காலம் தேடி எடுத்து வைக்கிறேன்"

ஏன் இந்த நிலை? மேலும் இந்தத்தேடலில் ஷெல்ஃபில் இருந்து ஒரு குப்பைக்கூளமே தரைக்கு இறங்கியிருந்தது. மேஜையின் இரண்டு ட்ராயர்களும் கவிழ்த்துப் போடப்பட்டிருந்தன. இதற்குள்ளாகவா இவ்வளவு பொருட்கள் இருந்தன? இவையெல்லாம் என்ன? எதற்காக காலங்காலமாக இங்கே தூங்கிக் கொண்டிருக்கின்றன? இந்த ஷெல்ஃபிலும், மேஜையிலுமே இவ்வளவு பொருட்கள் என்றால் இந்தப்பரணில் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைப்பெட்டிகளில் என்னென்னவெல்லாம் இருக்கும்?

1. Sorting - Classify

பிரித்தெடுங்கள் அத்தனையையும்..நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும், விஷயமும் இந்த இயற்கையிலிருந்தே பெறப்பட்டன. அது எதுவாயினும் அதை பயனுள்ளதாக்குங்கள், முழுதுமாக பயன்படுத்துங்கள். பயன்படுத்தப்பட்ட, காலங்கடந்த விஷயங்களை / முடிந்து போன விஷயங்களின் எச்சங்களை உடனே அப்புறப்படுத்துங்கள். உடைந்து போன கடிகாரங்கள், மேஜை விளக்குகள், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து நீங்கள் பெறப்போவது என்ன? நிஜமான பிரித்தெடுத்தலை நீங்கள் செய்வீர்களானால் இவ்வளவு இடம் இருந்ததா இந்த வீட்டில் என அதிர்வீர்கள்.

2. Straighten - Configure

பிரித்தெடுத்தலில் தேவையற்ற விஷயங்களை நீக்கியதோடு தேவையான பொருட்களை ஒருவித ஒழுங்கோடு "இது இங்கே.." என்ற கோட்பாட்டுடன் வைத்துள்ளீர்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். இதை எப்போதுமே மீறாதீர்கள். இனி சாவியைத்தேட வேண்டிய அவசியம் இருக்காது உங்களுக்கு. இதுவே ஒழுங்கு எனப்படுகிறது.

3. Shine - Clean

தேவைப்படும் இடங்களையும், பொருட்களையும் தேவையான இடைவேளையில் தவறாது சுத்தம் செய்யுங்கள்.

4. Systemize - Conformity

யார், எதை, எப்படிச் செய்வது என்பதை திட்டமிட்டு வழிமுறைப்படுத்திக் கொள்ளுங்கள். அது வெளிப்படையானதாக இருக்கட்டும்.

5. Sustain - Custom and practice

மேற்கண்ட நான்கு விதிகளையும் தவறாது கடைபிடியுங்கள். விதிமீறல்களையும், வழுவல்களையும் நீங்களும் செய்யாதீர்கள். பிறரும் செய்யாமல் கண்காணியுங்கள்.

இப்போது தெரிந்திருக்கும் 5S என்பது ஒரு தொழில்நுட்பம் (Technical) அல்ல.. ஒரு சித்தாந்தம் (Philosophy) அவ்வளவே.. இது ஜப்பானியர்களிடமிருந்து உலகெங்கும் பரவிய ஒரு செய்தி. S என்ற ஒலிக்குறிப்பில் ஆரம்பமாகும் ஐந்து ஜப்பானிய சொற்களிலிருந்து உருவானதே இது. அதன் மிக நெருங்கிய அர்த்தம் தரும் ஐந்து ஆங்கிலச் சொற்களே மேலே நீங்கள் கண்டது. இதை நாம் ஜப்பானியர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை.. வள்ளுவம் காட்டாத சித்தாந்தம் ஏதும் இருக்கிறதா என்ன.?

சரி ஒருவழியாய் 5S தெரிந்துகொண்டாயிற்று.. என்ற மகிழ்வுடன் நீங்கள் அலுவலகம் சென்றால் அங்கு உங்கள் மானேஜர் "ஹிஹி.. நாம் ஃபாலோ செய்யவேண்டியது 5S அல்ல.. 5C" என்று உங்களைக் கலவரப்படுத்த முயல்வார். பயப்படாதீர்கள், அது சும்மா டுபாக்கூர்.. இதையே வேலைகெட்ட ஒருவன் வேறு சொற்களால் அலங்கரித்துச் சொன்னதுதான் அது. (நம் இயக்குனர்கள் தெலுங்குப்படத்தை அப்படியே ஷாட் தப்பாமல் தமிழில் எடுத்துவிட்டு இயக்குனர் என்று பெயரைப் போட்டுக் கொள்வதில்லையா.. அது போல..) ஒவ்வொரு S உடனும் C என்று ஆரம்பிக்கும் சொல்லை இணைத்துள்ளேன் பாருங்கள். அவைதான் 5C.. அவ்வளவுதான்.!

Article from : http://thamira-pulampalkal.blogspot.com/2009/03/5.html

Saturday, March 21, 2009

மோகம் 30 நாள்.!

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(குறள் : 1092)

என்ன சொல்கிறது வள்ளுவம்? தலைவன் அறியாமல் அவனை விழுங்கும் தலைவியின் சிறு பார்வை மட்டுமே காமத்தின் பாதியளவு கூட இல்லை.. அதை விடவும் பெரிது என்கிறது. வெறும் பார்வைக்கு மட்டுமே இவ்வளவு எனில்.. அடுத்து.. அதற்கடுத்து.. எவ்வளவு பெரிய விஷயம் இது.!

"இத்தப்போயி எவண்டா 30 நாள்னு சொல்லிக்கினான்? கையில கெடச்சான்னா தாராந்துடுவான் மவனே.?"

"லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு பாக்குணும்.. ஏதா பொடி வெச்சி சொல்லிட்டிருப்பானுங்கோ.." என்று கண்ணன் என்னை அமைதிப்படுத்தினான்.

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த போது 270யை தாண்டிக்கொண்டிருந்த கண்ணனின் சொற்பொழிவு இதோ..

"மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.. நுப்பதாவது நாளே உண்டாயிட்டான்னு வெச்சுக்கோ.. போச்சா.. அப்பாலிக்கு டாக்டரு, டெஸ்ட்டுக்குன்னு அலைவியா? அவன் முத மூணு மாசம் வாணாம், கடேசி மூணு மாசம் வாணாம்பானா? நடுவாலிக்கா நீயே பக்கத்துல போக மாட்டியா.. புள்ள பொறந்தப்பொறவு எவுனும் சொல்லாமலே மூணு மாசம் போ மாட்டியா? அப்பாலிக்கா ரெண்டாவுது இப்ப வாணானு அவ சொல்லுவாளா.? அப்போ அதச்செய்யி, இதச்செய்யாத, அதப்பண்ணு, இதப்பண்ணாத ஒரு பெரிய லிஸ்டே இருக்குமா? என்னத்த.. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போயிருமா? இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? எல்லாம் முடிஞ்சு பாக்கும் போது நீ ஓஞ்சி போயிடுவயா? இப்ப கணக்குப் பாரு.. எவ்ளோ நாளு.. அந்த முத முப்பது நாளுதானே.. அதான் மோகம் நுப்பது நாளு.. அதுனால ‘போனா வராது, விடிஞ்சா இருக்காது.’ கவனமா இருந்துக்கோ.. அப்பயே ஜாலி பண்ணிக்கோன்றேன் நா.. இப்டிதான் நா திங்க் பண்ணிகினுருக்கேன்.. நீ இன்னா சொல்ற.?"

விட்டால் ஆன்மீக உரையைத் தொடரக்கூடும் என்பதால் கைத்தாங்கலாக அவனை படுக்க வைத்துவிட்டு நானும் சோபாவிலேயே சரிந்தேன்..

இவன் கூறும் நாள்கணக்குதான் அந்த பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறது. எனினும் இன்னொரு கோணமும் இருக்கிறது. அது "தேவை" என்ற பசி நோக்கில் மட்டுமே இருக்குமானால் முப்பது நாளென்ன, மூன்றே நாட்களில் கூட வடிந்துபோகலாம். ஆனால் "பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்" என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே..

ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன்.

Article from : http://thamira-pulampalkal.blogspot.com/2009/03/30.html

Friday, March 20, 2009

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

"உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்", என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி" என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்" என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்" என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்" என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை" என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்" அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி" தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி"யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை" என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்" என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்" எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்" என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு" என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்" என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

"எதிரிகள் மனிதர்களேயல்ல" என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்", என்பதை மறந்து, தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே" என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி"யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி" எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்" கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி" என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே" எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி". இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்" மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி"லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்" எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்" என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்" எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்" எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்" ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!" அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை"யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்" என்றும், அரசு பலத்தை "வீரமெ"ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்" போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

-ருத்ரன், மனநல மருத்துவர்.

Article from : http://tamilarangam.blogspot.com/2008/03/blog-post_29.html

Thursday, March 19, 2009

சலியாத மனமே அழியாத சொத்து

"கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை" என்று கவிஞர் சுரதா கூறியதுபோல, இன்றும் அதிகாலை எழுந்து நள்ளிரவு வரை உழைக்கின்ற தலைவர் கலைஞரின் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நான்கு கூறுகள் குறித்து இதுவரை கூறினேன். கூர்த்த மதி, கூடுதலான உழைப்பு, நெஞ்சு உரம், நிருவாகத் திறன் எனப்படும் அந்நான்கு கூறுகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளையும் நாம் பார்த்தோம். ஆனால் அவற்றையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய்ப் படுகின்றது.

"சலிப்படைவது" என்னும் குணம், எந்த ஒரு மனிதனுக்கும் இயல்பானது. சலிக்கும் கால அளவு, ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும் எதன் மீதும் நமக்குச் சலிப்பு வந்தே தீரும். நமக்கு மட்டுமல்ல, மாபெரும் தலைவர்களுக்கும், போர் வீரர்களுக்கும் கூடச் சில நேரங்களில் சலிப்பு வந்து விடும். எண்பதுக்கும் மேற்பட்ட போர்க்களங்களைக் கண்ட நெப்போலியனுக்குக் கூட, ஒரு கட்டத்தில் போர் சலித்தது. செயின்ட் ஹெலினா தீவிலிருந்து (சிறை) தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அந்தச் சலிப்பை நாம் பார்க்க முடிகிறது.

அரும்பெரும் தியாகங்களை எல்லாம் செய்து, நாட்டின் விடுதலைக்காய்த் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அரிய தலைவர் வ.உ.சி.க்குக் கூட, இறுதி நாள்களில் அரசியல் சலித்தது, இலக்கியம் நோக்கிச் சென்றார். சிறுகதை மன்னன் என்று அறியப்படும் ஜெயகாந்தன் அண்மையில் எழுதிய சிறுகதை எதையும் காண முடியவில்லை. ஜெயகாந்தனுக்குச் சிறுகதை சலித்திருக்கலாம். ஆனால், 85 வயதான பின்னும், அரசியல் சலிக்கவில்லை, இலக்கியம் சலிக்கவில்லை, சமூகச் சிந்தனை சலிக்கவில்லை. இப்படி ஒரு மனிதர் நம்மிடையே உண்டென்றால், அவர் கலைஞர்தான்.

இயல்பாகக் குழந்தைகள்தான் எதிலும் சலிப்படையாமல் இருப்பார்கள். ஒரே விளையாட்டைப் பலமுறை திருப்பித் திருப்பி விளையாடுவார்கள். சலிக்காது. வயது ஏற ஏற, சலிப்படையும் மனமும் வளர்ச்சியடைகிறது. ஆனால் கலைஞரோ விதிவிலக்காக இருக்கிறார். அரசியலில் ஆயிரம் நெருக்கடிகள், நடக்கவே சிரமப்படும் உடல் என எல்லாச் சிக்கல்களுக்கு மிடையில், நாள்தோறும் அவர் எழுத்திலும், பேச்சிலும் காணப்படும் நக்கல், கேலி நையாண்டிகள் எதைக் காட்டுகின்றன. சலியாத மனம் ஒன்று, அவரிடம் அழியாத சொத்தாக உள்ளது என்பதைத்தானே! அந்த மனம்தான் அவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்று நமக்குத் தோன்றுகிறது. அந்த குணம், அய்யா பெரியாரிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

(16.09.08 - சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து)

Article from : http://subavee.wordpress.com/2008/11/10/oct08/

மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

யார் யார் என்னென்ன விண்ணப்பங்களை நீட்டுவார்கள் என்பது கிட்டத்தட்ட முன்கூட்டியே அனுமானிக்கக் கூடிய ஒன்றுதான். இதைப் பற்றி நமக்கு ஒரு முன்கூட்டிய வரைபடம் மனத்தில் இருந்தால் இந்தப் பதில் மிக அழகுற சர்வசாதாரணமாக வந்து விழும்.

எது ஒன்றையும் மறுக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் எவரையும் புண்படுத்த நமக்கு உரிமை இல்லை என்பதை நாம் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

மறுப்புகளை முகத்தில் அறைந்தாற்போல் சொல்வதில்லை என்கிற கொள்கையில் தீர்மானமாக இருங்கள்.

"உங்களுக்கு எப்படி இல்லை; முடியாதுன்னு சொல்றதுன்னுதான் யோசிக்கிறேன்" என்கிற பதிலில் மென்மையும் இருக்கிறது. "முடியாது போய்யா" என்கிற வலிமையான எதிர்மறைச் செய்தியும் இருக்கிறது.

மறுப்புச் சிரிப்பு சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மறுப்புச் சிரிப்பா? இது என்ன சிரிப்பு? இதை எப்படி வெளிப்படுத்துவது? கற்றுத் தாருங்கள் என்பவர்களுக்கு என் பதில் இதுதான். முகத்தை சற்றே அதிருப்தியாக வைத்துக் கொள்ள வேண்டும். தலையை எதிரும் புதிருமாக வலுவாக ஆட்டாமல் மெதுவாக ஆட்ட வேண்டும்.

இதை ஆங்கிலத்தில் (Non Verbal Negative) என்பார்கள். ஒரு வார்த்தைக்கூட நீங்கள் சொல்லவில்லை. ஆனால் எதிராளிக்கு உங்களது இயலாமையை அழகுறச் சொல்லிவிட்டீர்கள்.

அது வந்து…. அது வந்து… என்ற இடைவெளி விட்டு இழுத்து இழுத்து வாக்கியத்தை முடித்து விடாமல் மொட்டையாக முடிப்பதும் ஒருவித மறுப்புதான். ஏன் இந்தாள் இப்படி அசடு வழியறாரு என்று எதிரி முடிவிற்கு வந்தாலும் பரவாயில்லை. புண்படாதபடி மறுத்துவிட்ட வெற்றி நமக்கே சொந்தம்.

சில நேரங்களில் எதிராளி சாமர்த்தியசாலியாகவும் காரியவாதியாகவும் அமைந்துவிடுவது உண்டு. இத்தகையவர்கள் நம்மிடமிருந்து மறுப்பை வெளிப்படையாக எதிர்பார்ப்பார்கள். இவர்களிடம் கூட நாம் தோற்றுவிடக் கூடாது.

"என் வாயால அந்த வார்த்தையைச் சொல்ல வைக்காதீங்க" என்று சொல்லியே இவர்களைச் சமாளித்து விடலாம்.

பாவம் சொல்லவே சங்கடப்படுகிறார். இதற்கு மேல் அவரைக் கேட்கக் கூடாது என்று எதிராளியை எண்ண வைத்தால் அதுவே ஒரு மறுப்பிற்குக் கிடைத்த வெற்றி எனலாம்.

Article from : http://www.tamilvanan.com/content/2009/02/13/identify-ahead-of-request/

Monday, March 16, 2009

பணிவு:வாழ்வை உயர்த்தும் பண்பு

சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது. வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.

இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும் பணிவாகாது அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.

மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.

பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது , எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது. இன்சூரன்ஸ் ஏஜென்டுகள் போல எல்லாப் பக்கமிருந்தும் நீங்கள் கேட்காமலே உதவி தேடி வரும். மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக் பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். திறமையான பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின் சக்தியைக் கொண்டே காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.

அதிகமான கல்வி, புகழ், பதவி, அதிகாரம், செல்வம் நம்மிடம் சேர்ந்தால் அதைக் கொண்டு பிறர் பயன் பெறும் வரை தான் நமக்கு உயர்வு. மாறாக அது தரும் செருக்கால் மற்றவர்களது உணர்வுகள் காயப்படும் போது நாம் நாம் கீழ் நோக்கி செல்லத் தொடங்குகிறோம். அப்படி பிறர் நோகும் படி மமதையில் வாழ்பவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவன் கதி மாட்டிக்கொண்ட பிக் பாக்கட் கதி தான்.

அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.

கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.

சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.

தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?

இறைவன் இருக்கிறான் என நம்புவதும் இல்லை என்று நம்புவது அவரவர் நம்பிக்கை. அவரவர் நிலை பாடு .இரண்டுமே சரிதான். அது இறைவன் என்று கொண்டாலும் சரி நம்மை சுற்றியுள்ள உலகம் என்று கொண்டாலும் அந்த மாபெரும் சக்திக்கு நம் வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த சக்தியிடம் பணிவு காண்பிக்க வேண்டும். இந்த செல்வமும் புகழும் இறைவன் தந்தது அது இறைவனுக்கே சொந்தம் என்பது பணிவின் சின்னம். சந்தோசத்தை, வெற்றியை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இதில் இறைவன் என்பது நான் நீங்கலாக உள்ள உலகம் எனவும் பொருள் கொள்லலாம். இப்படி தன்னை சுற்றியுள்ளதை பெருமைப்படுத்தும் தன்னடக்கமான உள்ளம் ஜொலிக்கும் . காரணம் தன்னை சுற்றியுள்ள உலகத்தின் பிரதிபலிப்பு தான் "தான்" என்பது.

எல்லா மதங்களும் முதலில் பணிவை, கீழ் படிதலை அல்லது அகந்தை அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டிய முதன்மை பண்பு இது தான்.இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாதவர் வாழ்க்கைப் பயணம் மிக கஸ்டமான பாதையில்.

Article from : http://sathik-ali.blogspot.com/2009/03/blog-post_07.html

Thursday, March 12, 2009

வேண்டாத குணங்கள் ??

ஒரு மனிதனின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க சில குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என சொல்ல படுகிறது. ஆசை, கோபம், எதிர்ப்பு உணர்வு, பழி வாங்கும் செயல், போன்ற குணங்கள் கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிப்பார்களாம். ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கையா? வெற்றி கரமான வாழ்க்கையா? நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. நல்லவன் நிம்மதியாக இருக்கிறான், வல்லவன் வெற்றி அடைகிறான். நல்லவன் நல்லவன் என்றால்? வல்லவன் தீயவனா? அப்படி அல்ல! நல்லவன் ஒருவன் தீய குணங்கள் கொண்ட வல்லவனிடம் தோற்று போய்விட கூடாது. நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.

ஆசை வேண்டும்!

ஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னார் அவர் சொன்னது நிம்மதியான வாழ்க்கைக்கு! ஆனால் வெற்றிகரமான வாழ்க்கைக்கு? ஆசையே எல்லாவிதமான இன்பத்திற்கும் அடிப்படை காரணம். ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.

கோபம் வேண்டும்!

கோபம் என்பது ஒரு சக்தி! கோபம் என்பது ஒரு ஆற்றல்! ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள்? கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எதிரி வேண்டும்!

உனக்கு நூறு நண்பர்கள் இருக்கிறார்களா அது குறைவு! உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா? அது அதிகம்! இது பழைய பழமொழி! ஆனால்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு? எதிரிகள் வேண்டும்! கவிஞர் வைரமுத்து சொன்னது போல, எதிர்ப்புகள் வாழ்க்கையின் பிடிமானங்கள்! எதிரி என்று உனக்கு யாரும் இல்லையெனில் எதிரியை ஏற்படுத்திகொள். உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான். நண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால்? எதிரி இல்லாமல் வளர முடியாது!

பழி வாங்கும் உணர்வு வேண்டும்!

எந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயம் அவன் வறுமை காரணமாகவோ அவன் இயலாமை காரணமாகவோ அவமான பட்டு இருப்பான்அல்லது உதாசீனபடுத்த பட்டு இருப்பான். அப்படி அவன் இகழ படும்போது அவன் தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா? இல்லை! அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.

வெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டேஇருக்க வேண்டும் .

Article from : http://pirathipalippu.blogspot.com/2009/03/blog-post_11.html

Wednesday, March 11, 2009

சில்லுன்னு ஒரு சம்மர் - கோடையைச் சமாளிக்க டிப்ஸ்

பிப்ரவரி முடிஞ்சி மார்ச் ஆரம்பிக்கும்போதே சென்னைல வெய்யில் கொளுத்தத் தொடங்கிடுச்சு! இனிமே பொழுது சாஞ்சி பொழுது விடிஞ்சா "ஸ்ஸப்பா என்னா வெய்யில் என்னா வெய்யில் எப்படித்தான் சமாளிக்கிறதோ!" என்ற ஆதங்கப் பல்லவியை தினமும் கேட்க நேரிடலாம்! இப்படி ஆதங்கப் பல்லவியை தினமும் பாடினாலும் வெயிலை அனுபவிச்சித்தானே ஆகணும்! தப்பிக்க முடியாதல்லவா!

சென்னைலயே இருக்குறவங்களுக்கு இது பழகிப் போன ஒண்ணுதான்! அவங்களும் இந்த வெயில்னாலே இருந்து ஏற்படும் உடல்நலக் குறைவுகளில் குறைந்தபட்சம் காத்துக் கொள்ள அட்வான்ஸா இந்த டிப்ஸ்!

1. குளியல்

இந்த கோடைக்காலம் வந்துட்டாலே நம்ம உடம்பு விய்ர்வையை அதிகமா வெளிப்படுத்தும்! என்னதான் 12 மணி நேரம் குளிர்சாதன வசதி செஞ்ச அறைகளிலேயே இருந்தாலும்(இப்போதைய எகானமிக்கு சரிப்படுமா?) அப்பப்போ கொஞ்சம் வெளிய தலைகாட்டித்தான ஆகணும்ல், இந்த வியர்வைக் கசகசப்பு நம்ம உடம்புல ஒரு துர்நாற்றத்தை உண்டுபண்னும்!

காலை, மாலை ரெண்டு வேளையும் குளிச்சா இந்த பிரச்சினை ஓரளவு தீர்ந்துடும்! இப்பத்தான் தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லையே! நல்ல சோப்பாத் தேச்சி ரெண்டு வேளை குளிச்சா உடம்பு வியர்வைக் கசகசப்பும் இருக்காது! அதனால வர துர்நாற்றம் மற்றும் தோல் பிரச்சினைகளில் இருந்து எஸ்கேப் ஆகலாம்! நைட்லே நல்லா தூக்கமும் வரும்!

2. காஸ்மெடிக்ஸ்:

உடலை குளிர்ச்சியா வெச்சிக்க, வேர்வைக் கொப்புளங்கள், வேனில் கட்டிகள் வராம இருக்க நல்ல டால்கம் பவுடரா வாங்கி உடம்புல போட்டுக்கலாம்!

வார விடுமுறை நாட்களில் வீட்டுலே இருக்கும்போது டால்கம் பவுடரைத் தவிர்த்துட்டு இயற்கை தந்த இனிய குளிர்ச்சி தரும் வஸ்து, அதாங்க நம்ம சந்தனம்! அதை எடுத்து பூசிக்கலாம்! அந்த காலத்துல பெரியவங்க எதனால சாமி கும்பிட்டவுடன் சந்தனத்தை எடுத்து நெற்றி, மார்பு, தோள்கள், வயிரு, கைகள்னு பூசிகிட்டாங்கன்னு நினைக்கிறீங்க! நம்ம ஊர் வெயிலை சமாளிக்கத்தான்! கடவுளே நமக்குத் தேவையான, நம்ம ஊர் வெயிலை நம்ம உடல் தாங்கிக் கொள்ளும்படியான வழி செய்யத்தான் சந்தனத்தை ரெகமண்ட் பண்ணி இருக்கான்!

கோவில்களில் சிலைக்கு சந்தனக் காப்பு, சந்தன அபிஷேகம் எல்லாம் இதன் அடிப்படையில்தான்னு நினைச்சிகிட்டு எடுத்து பூசிக்குங்க! சந்தனத்தோட பன்னீர் சேர்த்து பிசைஞ்சி பூசிக்கிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்!

தவிர நம்ம தோல் வெயிலால பாதிக்கப் படாம இருக்க நல்ல கிரீம்களையும் வாங்கி உபயோகிக்கலாம்! அந்த கிரீம்கள் கூட பெரும்பாலும் கெமிக்கல்ஸ் இல்லாம ஹெர்பல் புராடக்ட்ஸா இருந்தா நல்லது! அவற்றைக் கூட உங்க டாக்டர்ஸைக் கன்சல்ட் பண்ணிட்டு பயன்படுத்துங்க! அதுதான் நல்லது!

3. உடைகள்:

கோடைக்காலத்துக்கு மெல்லிய காட்டன் உடைகள்தான் எப்பவுமே பொருத்தமானவை! இந்த கோடைக் காலங்காளில் இறுக்கமான ஜீன்ஸ், டீஷர்ட் போன்றவற்றை தவிர்த்துவிட்டு மெல்லிய காட்டன் சட்டைகள், கொஞ்சம் காற்றுப் புகும் வண்ணம் இறுக்கமாக இல்லாமல் அணிந்து கொள்தல் நலம் பயக்கும்! துவைத்த தூய்மையான உள்ளாடைகளையே அணிதல் வேண்டும்!

அதே போல அலுவலகத்தில் 8 மணிநேரமும் சாக்ஸ்(காலுறை) அணிந்து ஷீ அணிந்து கொண்டிருப்பீர்கள்! அவற்றை முழுசா 8 மணி நேரமும் போட்டுக் கொண்டிருக்காமல் லஞ்ச் அவர் மற்றும் தொடர்ச்சியா உக்காந்து வேலை செய்யும் நேரன்ங்களில் கழற்றி வைத்து விட்டு பாதங்களைத் தண்ணீரால் கழுவி விட்டு ரிலாக்சாக இருக்கலாம்!

ஒரு நாள் அணிந்த காலுறைகளை மீண்டும் அணியாமல் துவைத்து காய வைத்த சுத்தமான காலுறைகளை அணிவது உங்களுக்கும் நல்லது! அடுத்த சீட் அலுவலர்களுக்கும் நல்லது!

4. குளிர்பானங்கள்:

கோடைக் காலம் வந்துவிட்டாலே காஃபி, டீ போன்றவற்றை தவிர்த்து அதிகமாக குளிர்பானங்களை அருந்த தொடங்கி இருப்போம்! குளிர் பானங்கல் எனும்போது கூட குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் பெப்ஸி, கோக் போன்றவை அருந்தும்போது அப்போதைக்கு சுவையாகவும், தாகத்திற்கு இதமாகவும் இருப்பது போல் தோன்றினாலும் ஃப்ரெஷ்ஷான பழச்சாறுகள், மோர், இளநீர், பதநீர் போன்றவையே கோடைக்கு ஏற்ற பாங்கங்கள்!

சுத்தமான, ஃப்ரெஷ்ஷான பழச்சாறுகள் ஐஸ் போடாமல் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது! மோர் அருந்தும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வெண்ணெய் எடுத்த மோராக இருத்தல் அவசியம்! மோரில் சிறுது உப்பு, சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லித் தழைகள் போட்டு வைத்தும் அருந்தலாம்! சுவையாகவும் இருக்கும்!

கோடையில் நம் உடல் அதிக அளவு நீரை வியர்வையாக வெளியேற்றுவதால் அதை சமன்செய்ய நிறைய தண்ணீர் குடித்தல் அவசியம்!

5. பழங்கள்:

கோடை சீசன் வந்துவிடாலே குவியல் குவியலாகத் தர்பூசணிப் பழங்கள் வந்துவிடும்! நல்ல பழமா கன்னம் போட்டுப் பார்த்து வாரம் ஒன்று அல்லது இரண்டு என்று வீட்டுக்கு வாங்கிட்டுப் போயிடுங்க! நல்ல நீர்சத்து மற்றும் நார்ச்சத்து!

மேலும் கோடை என்றாலே நினைவுக்கு வருவது நுங்கு! இது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கிடைப்பதுபோல சிட்டிக்குள் கிடைப்பதில்லைதான்! இருந்தாலும் கிடைக்கிறப்போவெல்லாம் வாங்கி சாப்பிட்டு கோடை வெயிலுக்கு சவால் விடலாம்!

கோவை மற்றும் தென் மாவட்டங்களில் நுங்கு போலவே பதநீரும் கிடைக்கும்! பதநீர் எவ்வளவு சுவை மற்றும் குளிர்ச்சியானதுன்னு சொல்லுத் தெரியவேண்டியதில்லை! கோவையிலெ, மதுரைலயெல்லாம் ஓலையை மடிச்சி அதுலயே ஊற்றிக் கொடுப்பார்கள்! கோவைல அதுலயே நுங்குவையும் போட்டுத் தருவார்கள்! இந்த விஷயத்துலே கோவை, மதுரைக்காரவுக கொடுத்து வெச்சவுக!

மேலும் சாத்துக்குடி, திராட்சை, பைனாப்பிள் போன்ற பழங்களையும் வாங்கி உண்ணலாம். அல்லது சாறுபிழிந்தும் அருந்தலாம்!

கோடையில் அதிகமான அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது! பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கலாம்!

நமக்கெல்லாம் சம்மர்லே ரொம்ப பிடிச்ச டிரெஷனல் உணவு பழைய சாதமும் மோரும், கடிச்சிக்க சின்ன வெங்காயமும்தான்!

அப்புறம் பெரிய வெங்காயத்தை சின்னச் சின்னதா அறிஞ்சி போட்ட கம்மங்கூழ்! இது சென்னைல கிடைக்குறதில்லே! சென்னைலே கேழ்வரகுக் கூழ்தான்! சேலம், ஈரோடு, கோவை ல இந்தக் கம்மங்கூழ் ஃபேமஸ்! கிராமங்களில் யாரு வீட்டுக்காச்சும் போனா முதல் நாள் செஞ்ச கம்மஞ்சோறை எடுத்து தயிர் ஊத்தி கல்ந்து கொடுப்பாங்க பாருங்க! பர்கர், சீஸ் பிட்சா வெல்லாம் எம்மாத்திரம் அதுக்கு முன்னாடி!

கோடைக்காலம் மட்டுமில்லாம எப்பவுமே நமக்குக் கிடைக்கிற குளிர்பானம் இளநீர்! என்ன ஒண்ணு! ஏழைகளின் ஆப்பிள்னு தக்காளியும், சில சமயம் ஏழைகளின் தக்காளின்னு ஆப்பிளும் மாறி மாறி வராமாதிரி ஏழைகளின் இளநீர்னு சீக்கிரமே ஒரு ஆல்டர்நேட்டிவ் வந்தா நல்லா இருக்கும்!

இதெல்லாம் வெயிலை உங்க உடம்பு சமாளிக்க ஏற்ற யோசனைகள்தான்! மேலும் கூட நீங்க நினைவுல வெச்சிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்

1. கொஞ்சம் உடற்பயிற்சி : சீக்கிரமே வெயில் வந்துடும்! எனவே அதிகாலை 5 மணிக்கெல்லாம்(5 மணியெல்லாம் அர்த்த ராத்திரின்னு சொல்றவங்களும் இருப்பீங்க) எழுந்திருச்சு வாக்கிங்கோ/ஜாகிங்கோ கெளம்பிடுங்க!

2. நிறைய தண்ணீர் (பச்சைத் தண்ணிங்க) குடிச்சிகிட்டிருங்க!

3. அளவான சாப்பாடு (ஹெவியான உணவுகளைத் தவிர்த்தல் எளிய ஜீரணத்திற்கு வசதியா இருக்கும்)

4. நல்ல உறக்கம்! (குறைந்த பட்சம் 6 மணி நேரமும் அதிக பட்சம் 8 மணி நேரமும் தூங்கலாம்)

5. எண்ணெய்க் குளியல்

6. ரிலாக்ஸா ஊட்டி/கொடைக்கானல்/குற்றாலம்/ஏற்காடுன்னு வசதிக்கேற்றார்போல குடும்பத்தோட ஒரு டூர் அடிங்க!

வேலை வேலைன்னு டென்ஷனோடவே இருந்தா வேலையும் இருந்துகிட்டேதான் இருக்கும்! டென்ஷனும் குறையாது! வேலை டென்ஷனையெல்லாம் ஒரு 2/3 நாளைக்கு மூட்டை கட்டி வெச்சிட்டு குடும்பத்தோட டூர் போறதால டென்ஷன் குறையும்! மனசு ரிலாக்ஸ் ஆகும்! குடும்ப உறுப்பினர்களுக்கும், குழந்தைகளுக்கும் சந்தோஷம்!

நம்ம உடலை மட்டுமே நாம காப்பாத்திகிட்டா போதுமா! முடிஞ்ச வரை ஒவ்வொருத்தரும் அவங்கவங்க கையாலே சின்னதா ஒரு மரக்கன்று நட்டு வைச்சோமுன்னா பின்னாடி நம்ம ஊரும் பசுமையா இருக்கும்! குளுகுளுன்னு நமக்கும் காத்து வரும்! சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஆளுக்கொரு மரம் நட்டாக் கூட போதும்! மரங்கள் நிறைஞ்சி நம்ம நாடே குளுமையா பசுமையா ஆகிடும்! அப்புறம் புவி வெப்பமயமாதல்/ குளோபல் வார்மிங், காற்று மாசுபடுதல் பத்தியெல்லாம் நாம கவலைப் படத் தேவையே இல்லை! எல்லா விஷயங்களையும் நாம நட்டு வைக்கும் மரங்களே கவனிச்சிக்கும்!

எங்கே கெளம்பிட்டீங்க! மரக்கன்று வாங்கத்தானே!

Article from : http://pithatralgal.blogspot.com/2009/03/blog-post_09.html

Tuesday, March 10, 2009

படித்தது: கொலையுதிர்காலம் -‍ சுஜாதா

சுஜாதாவின எழுத்துநடையில் சாதாரண லீவ் லெட்டர் எழுதினாலே சுவையாக இருக்கும். அதுவும் மர்மநாவல் என்றால் கேட்கவேண்டுமா?

சுஜாதா ஒருகாலகட்டத்தில் நிறைய மர்மக்கதைகள் எழுதினார், ஆனாலும் அவர் அந்த கதைகளுக்காக மக்கள் மனதில் நிலைத்திருக்கவிரும்பவில்லை என்று தெரிகின்றது. அவரது காவியக்கதாபாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த். இந்த பெயர்களை கடக்காமல் ஒரு வாசகன் உருவாக வாய்ப்பில்லை.

கணேஷ் வசந்த் பற்றி இங்கு சொல்லப்போவதில்லை, அவர்களைப்பற்றி தனியாக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். இந்த நாவலைப்போல் இவர்கள் இருவரும் அடி வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு அடி வாங்குகின்றனர். மிகவும் சுவாரசியமாக ஆவி, மறுபிறப்பு சமாச்சாரங்களை கையாண்டிருக்கின்றார் சுஜாதா. அவரைப்போன்ற அறிவியல் ஆசாமிகள் இதை நம்பினால் அவரது நம்பகத்தன்மை என்ன ஆகுமென்று அனைவருக்கும் தெரியும். அதற்கேற்றார்போல் இந்த நாவலில் அவரது பாணியில் கதையை நகற்றிச்சென்றுள்ளார்.

முதல்நாள் இரவு படிக்கத்துவங்கி லேசாக பயந்து பின் இரவு முடிந்தவரை தொடர்ந்தேன். உண்மையாகவே இந்த நாவல் லேசாக பயமுறுத்துகின்றது.

ஒரு கிராமத்தில் உள்ள பூர்வீகநிலத்தை விற்க உதவ வரும் கணேஷ், வசந்த் அந்த நிலத்தில் உள்ள வில்லங்கங்களை லேசாக கிளற, அந்த நிலத்தின் சொந்தக்காரியாக இருக்கப்போகிற ஒரு மைனர் பெண்ணால் அவளைச்சுற்றி கொலைகள் நடக்க, அதற்கு பூர்வஜென்ம ஆவிகள் துணைபோவதாக ஒட்டுமொத்த கிராமமும் நம்புகின்றது. இதை கணேஷ், வசந்த் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை உதவியுடன் அணுகி அனைத்தையும் சமாளித்து வெற்றி பெறுவதுதான் கதை.

நல்ல அருமையான விறுவிறுப்பான நாவல். படித்துப்பாருங்கள் நிறைய அறிவியல் தகவல்களை அந்தகாலத்திலேயே எழுதி கலக்கியிருக்கிறார் வாத்தியார்.


Article from : http://pathividukiren.blogspot.com/2009/03/blog-post_05.html