Wednesday, March 11, 2009

சில்லுன்னு ஒரு சம்மர் - கோடையைச் சமாளிக்க டிப்ஸ்

பிப்ரவரி முடிஞ்சி மார்ச் ஆரம்பிக்கும்போதே சென்னைல வெய்யில் கொளுத்தத் தொடங்கிடுச்சு! இனிமே பொழுது சாஞ்சி பொழுது விடிஞ்சா "ஸ்ஸப்பா என்னா வெய்யில் என்னா வெய்யில் எப்படித்தான் சமாளிக்கிறதோ!" என்ற ஆதங்கப் பல்லவியை தினமும் கேட்க நேரிடலாம்! இப்படி ஆதங்கப் பல்லவியை தினமும் பாடினாலும் வெயிலை அனுபவிச்சித்தானே ஆகணும்! தப்பிக்க முடியாதல்லவா!

சென்னைலயே இருக்குறவங்களுக்கு இது பழகிப் போன ஒண்ணுதான்! அவங்களும் இந்த வெயில்னாலே இருந்து ஏற்படும் உடல்நலக் குறைவுகளில் குறைந்தபட்சம் காத்துக் கொள்ள அட்வான்ஸா இந்த டிப்ஸ்!

1. குளியல்

இந்த கோடைக்காலம் வந்துட்டாலே நம்ம உடம்பு விய்ர்வையை அதிகமா வெளிப்படுத்தும்! என்னதான் 12 மணி நேரம் குளிர்சாதன வசதி செஞ்ச அறைகளிலேயே இருந்தாலும்(இப்போதைய எகானமிக்கு சரிப்படுமா?) அப்பப்போ கொஞ்சம் வெளிய தலைகாட்டித்தான ஆகணும்ல், இந்த வியர்வைக் கசகசப்பு நம்ம உடம்புல ஒரு துர்நாற்றத்தை உண்டுபண்னும்!

காலை, மாலை ரெண்டு வேளையும் குளிச்சா இந்த பிரச்சினை ஓரளவு தீர்ந்துடும்! இப்பத்தான் தண்ணீர் பஞ்சமெல்லாம் இல்லையே! நல்ல சோப்பாத் தேச்சி ரெண்டு வேளை குளிச்சா உடம்பு வியர்வைக் கசகசப்பும் இருக்காது! அதனால வர துர்நாற்றம் மற்றும் தோல் பிரச்சினைகளில் இருந்து எஸ்கேப் ஆகலாம்! நைட்லே நல்லா தூக்கமும் வரும்!

2. காஸ்மெடிக்ஸ்:

உடலை குளிர்ச்சியா வெச்சிக்க, வேர்வைக் கொப்புளங்கள், வேனில் கட்டிகள் வராம இருக்க நல்ல டால்கம் பவுடரா வாங்கி உடம்புல போட்டுக்கலாம்!

வார விடுமுறை நாட்களில் வீட்டுலே இருக்கும்போது டால்கம் பவுடரைத் தவிர்த்துட்டு இயற்கை தந்த இனிய குளிர்ச்சி தரும் வஸ்து, அதாங்க நம்ம சந்தனம்! அதை எடுத்து பூசிக்கலாம்! அந்த காலத்துல பெரியவங்க எதனால சாமி கும்பிட்டவுடன் சந்தனத்தை எடுத்து நெற்றி, மார்பு, தோள்கள், வயிரு, கைகள்னு பூசிகிட்டாங்கன்னு நினைக்கிறீங்க! நம்ம ஊர் வெயிலை சமாளிக்கத்தான்! கடவுளே நமக்குத் தேவையான, நம்ம ஊர் வெயிலை நம்ம உடல் தாங்கிக் கொள்ளும்படியான வழி செய்யத்தான் சந்தனத்தை ரெகமண்ட் பண்ணி இருக்கான்!

கோவில்களில் சிலைக்கு சந்தனக் காப்பு, சந்தன அபிஷேகம் எல்லாம் இதன் அடிப்படையில்தான்னு நினைச்சிகிட்டு எடுத்து பூசிக்குங்க! சந்தனத்தோட பன்னீர் சேர்த்து பிசைஞ்சி பூசிக்கிட்டா உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்!

தவிர நம்ம தோல் வெயிலால பாதிக்கப் படாம இருக்க நல்ல கிரீம்களையும் வாங்கி உபயோகிக்கலாம்! அந்த கிரீம்கள் கூட பெரும்பாலும் கெமிக்கல்ஸ் இல்லாம ஹெர்பல் புராடக்ட்ஸா இருந்தா நல்லது! அவற்றைக் கூட உங்க டாக்டர்ஸைக் கன்சல்ட் பண்ணிட்டு பயன்படுத்துங்க! அதுதான் நல்லது!

3. உடைகள்:

கோடைக்காலத்துக்கு மெல்லிய காட்டன் உடைகள்தான் எப்பவுமே பொருத்தமானவை! இந்த கோடைக் காலங்காளில் இறுக்கமான ஜீன்ஸ், டீஷர்ட் போன்றவற்றை தவிர்த்துவிட்டு மெல்லிய காட்டன் சட்டைகள், கொஞ்சம் காற்றுப் புகும் வண்ணம் இறுக்கமாக இல்லாமல் அணிந்து கொள்தல் நலம் பயக்கும்! துவைத்த தூய்மையான உள்ளாடைகளையே அணிதல் வேண்டும்!

அதே போல அலுவலகத்தில் 8 மணிநேரமும் சாக்ஸ்(காலுறை) அணிந்து ஷீ அணிந்து கொண்டிருப்பீர்கள்! அவற்றை முழுசா 8 மணி நேரமும் போட்டுக் கொண்டிருக்காமல் லஞ்ச் அவர் மற்றும் தொடர்ச்சியா உக்காந்து வேலை செய்யும் நேரன்ங்களில் கழற்றி வைத்து விட்டு பாதங்களைத் தண்ணீரால் கழுவி விட்டு ரிலாக்சாக இருக்கலாம்!

ஒரு நாள் அணிந்த காலுறைகளை மீண்டும் அணியாமல் துவைத்து காய வைத்த சுத்தமான காலுறைகளை அணிவது உங்களுக்கும் நல்லது! அடுத்த சீட் அலுவலர்களுக்கும் நல்லது!

4. குளிர்பானங்கள்:

கோடைக் காலம் வந்துவிட்டாலே காஃபி, டீ போன்றவற்றை தவிர்த்து அதிகமாக குளிர்பானங்களை அருந்த தொடங்கி இருப்போம்! குளிர் பானங்கல் எனும்போது கூட குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் பெப்ஸி, கோக் போன்றவை அருந்தும்போது அப்போதைக்கு சுவையாகவும், தாகத்திற்கு இதமாகவும் இருப்பது போல் தோன்றினாலும் ஃப்ரெஷ்ஷான பழச்சாறுகள், மோர், இளநீர், பதநீர் போன்றவையே கோடைக்கு ஏற்ற பாங்கங்கள்!

சுத்தமான, ஃப்ரெஷ்ஷான பழச்சாறுகள் ஐஸ் போடாமல் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது! மோர் அருந்தும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் வெண்ணெய் எடுத்த மோராக இருத்தல் அவசியம்! மோரில் சிறுது உப்பு, சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லித் தழைகள் போட்டு வைத்தும் அருந்தலாம்! சுவையாகவும் இருக்கும்!

கோடையில் நம் உடல் அதிக அளவு நீரை வியர்வையாக வெளியேற்றுவதால் அதை சமன்செய்ய நிறைய தண்ணீர் குடித்தல் அவசியம்!

5. பழங்கள்:

கோடை சீசன் வந்துவிடாலே குவியல் குவியலாகத் தர்பூசணிப் பழங்கள் வந்துவிடும்! நல்ல பழமா கன்னம் போட்டுப் பார்த்து வாரம் ஒன்று அல்லது இரண்டு என்று வீட்டுக்கு வாங்கிட்டுப் போயிடுங்க! நல்ல நீர்சத்து மற்றும் நார்ச்சத்து!

மேலும் கோடை என்றாலே நினைவுக்கு வருவது நுங்கு! இது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கிடைப்பதுபோல சிட்டிக்குள் கிடைப்பதில்லைதான்! இருந்தாலும் கிடைக்கிறப்போவெல்லாம் வாங்கி சாப்பிட்டு கோடை வெயிலுக்கு சவால் விடலாம்!

கோவை மற்றும் தென் மாவட்டங்களில் நுங்கு போலவே பதநீரும் கிடைக்கும்! பதநீர் எவ்வளவு சுவை மற்றும் குளிர்ச்சியானதுன்னு சொல்லுத் தெரியவேண்டியதில்லை! கோவையிலெ, மதுரைலயெல்லாம் ஓலையை மடிச்சி அதுலயே ஊற்றிக் கொடுப்பார்கள்! கோவைல அதுலயே நுங்குவையும் போட்டுத் தருவார்கள்! இந்த விஷயத்துலே கோவை, மதுரைக்காரவுக கொடுத்து வெச்சவுக!

மேலும் சாத்துக்குடி, திராட்சை, பைனாப்பிள் போன்ற பழங்களையும் வாங்கி உண்ணலாம். அல்லது சாறுபிழிந்தும் அருந்தலாம்!

கோடையில் அதிகமான அசைவ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது! பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்க்கலாம்!

நமக்கெல்லாம் சம்மர்லே ரொம்ப பிடிச்ச டிரெஷனல் உணவு பழைய சாதமும் மோரும், கடிச்சிக்க சின்ன வெங்காயமும்தான்!

அப்புறம் பெரிய வெங்காயத்தை சின்னச் சின்னதா அறிஞ்சி போட்ட கம்மங்கூழ்! இது சென்னைல கிடைக்குறதில்லே! சென்னைலே கேழ்வரகுக் கூழ்தான்! சேலம், ஈரோடு, கோவை ல இந்தக் கம்மங்கூழ் ஃபேமஸ்! கிராமங்களில் யாரு வீட்டுக்காச்சும் போனா முதல் நாள் செஞ்ச கம்மஞ்சோறை எடுத்து தயிர் ஊத்தி கல்ந்து கொடுப்பாங்க பாருங்க! பர்கர், சீஸ் பிட்சா வெல்லாம் எம்மாத்திரம் அதுக்கு முன்னாடி!

கோடைக்காலம் மட்டுமில்லாம எப்பவுமே நமக்குக் கிடைக்கிற குளிர்பானம் இளநீர்! என்ன ஒண்ணு! ஏழைகளின் ஆப்பிள்னு தக்காளியும், சில சமயம் ஏழைகளின் தக்காளின்னு ஆப்பிளும் மாறி மாறி வராமாதிரி ஏழைகளின் இளநீர்னு சீக்கிரமே ஒரு ஆல்டர்நேட்டிவ் வந்தா நல்லா இருக்கும்!

இதெல்லாம் வெயிலை உங்க உடம்பு சமாளிக்க ஏற்ற யோசனைகள்தான்! மேலும் கூட நீங்க நினைவுல வெச்சிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்

1. கொஞ்சம் உடற்பயிற்சி : சீக்கிரமே வெயில் வந்துடும்! எனவே அதிகாலை 5 மணிக்கெல்லாம்(5 மணியெல்லாம் அர்த்த ராத்திரின்னு சொல்றவங்களும் இருப்பீங்க) எழுந்திருச்சு வாக்கிங்கோ/ஜாகிங்கோ கெளம்பிடுங்க!

2. நிறைய தண்ணீர் (பச்சைத் தண்ணிங்க) குடிச்சிகிட்டிருங்க!

3. அளவான சாப்பாடு (ஹெவியான உணவுகளைத் தவிர்த்தல் எளிய ஜீரணத்திற்கு வசதியா இருக்கும்)

4. நல்ல உறக்கம்! (குறைந்த பட்சம் 6 மணி நேரமும் அதிக பட்சம் 8 மணி நேரமும் தூங்கலாம்)

5. எண்ணெய்க் குளியல்

6. ரிலாக்ஸா ஊட்டி/கொடைக்கானல்/குற்றாலம்/ஏற்காடுன்னு வசதிக்கேற்றார்போல குடும்பத்தோட ஒரு டூர் அடிங்க!

வேலை வேலைன்னு டென்ஷனோடவே இருந்தா வேலையும் இருந்துகிட்டேதான் இருக்கும்! டென்ஷனும் குறையாது! வேலை டென்ஷனையெல்லாம் ஒரு 2/3 நாளைக்கு மூட்டை கட்டி வெச்சிட்டு குடும்பத்தோட டூர் போறதால டென்ஷன் குறையும்! மனசு ரிலாக்ஸ் ஆகும்! குடும்ப உறுப்பினர்களுக்கும், குழந்தைகளுக்கும் சந்தோஷம்!

நம்ம உடலை மட்டுமே நாம காப்பாத்திகிட்டா போதுமா! முடிஞ்ச வரை ஒவ்வொருத்தரும் அவங்கவங்க கையாலே சின்னதா ஒரு மரக்கன்று நட்டு வைச்சோமுன்னா பின்னாடி நம்ம ஊரும் பசுமையா இருக்கும்! குளுகுளுன்னு நமக்கும் காத்து வரும்! சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல ஆளுக்கொரு மரம் நட்டாக் கூட போதும்! மரங்கள் நிறைஞ்சி நம்ம நாடே குளுமையா பசுமையா ஆகிடும்! அப்புறம் புவி வெப்பமயமாதல்/ குளோபல் வார்மிங், காற்று மாசுபடுதல் பத்தியெல்லாம் நாம கவலைப் படத் தேவையே இல்லை! எல்லா விஷயங்களையும் நாம நட்டு வைக்கும் மரங்களே கவனிச்சிக்கும்!

எங்கே கெளம்பிட்டீங்க! மரக்கன்று வாங்கத்தானே!

Article from : http://pithatralgal.blogspot.com/2009/03/blog-post_09.html

No comments:

Post a Comment