Monday, April 20, 2009

கோடையும் அப்படித்தான்...

கோடை வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. Global warming அச்சுறுத்துகிறது. வெயிலில் அரைநாள் பைக்கில் சுற்றினாலே உடம்பு படுத்துவிடுகிறது. பெண்களில் பலருக்கு யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல கோடையின் வருகை அவர்களது உடம்பில் ஏற்படும் மாற்றங்களால் உபாதைகளால் முன்னறியப்படுகிறது. டினோசார் போன்ற அத்தப் பெரிய ஜீவராசிகளே பருவநிலை மாற்றங்களால்தான் செத்து மடிந்தன என்பதை படிக்கும்போது ஒப்புக்கொண்டதைவிட இந்த வெயிலில் அலையும்போது சந்தேகத்துக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோம்.

வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்க 36 வழிகள் என்று நம்முடைய வாரப்பத்திரிகைகள் இலவச இணைப்புகள் வழங்குவார்கள். மோர்,இளநீர்,குளிர்பானங்கள்,தர்ப்பூசணி போன்றவை நம் காவல்தெய்வங்களாக கோடையில் கை கொடுக்கும். இதெல்லாம்விட நிறைய தண்ணீர் குடிப்பதுதான் அவசியம் என்று எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் நமக்குச் சொல்லுவார்கள். (அவர் யார் என்று கேட்கிறீர்களா 'உடலும் உள்ளமும் நலம்தானா?' என்கிற அற்புதமான சிறுநூலை எழுதியவர். உடல் நலம் மனநலம் இரண்டைப்பறியும் ஒருங்கே பேசிவரும் ஒரு சமூக சேவகர்.)

எங்கள் கரிசல்காட்டில் கோடைக்கு பானக்கரம் என்று ஒரு பானம் தயாரிப்பார்கள் கருப்பட்டியும் புளியும் மட்டுமே கரைத்த நீர். என்ன தேவாமிர்தமாக இருக்கும்?அதை விட்டால் புளிச்சாணி என வாய்ச்சொல்லால் வாங்கப்படும் புளிச்ச தண்ணி - இது அரிசிச் சோற்றுப் பானையில் பழைய சோற்றுடன் ஊறி ஊறிப் புளித்த தண்ணீர்தான் கோடையில் இதில் பச்சைத்தண்ணி கலந்து புளிப்பை மட்டுப்படுத்தி கொஞ்சம் உப்பு சேர்த்துக் குடிக்கக் குடிக்க அது கொண்டா கொண்டா என்று சொல்லும். இதன் நாகரீக வடிவம் அல்லது மத்திய தர வர்க்க வடிவம்தான் கலைவாணர் குடிச்சுப் பழகணும் என்று பாடிய நீராகாரம்.

நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருப்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும் கம்பங்கூழ். அந்தத் தள்ளுவண்டிகளைக்கண்டால் நம்ம கால்கள் தாமே அங்கு கொண்டு சென்று நம்மைச் சேர்த்து விடுகின்றன. எல்லா இடங்களிலும் சுத்தமான கூழ் கிடைப்பதாகக் கூற முடியாது. குடித்துப் பார்த்து நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். விவரமில்லாமல் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஒருமுறை கம்பங்கூழ் குடித்து அன்றே புடுங்கிக் கொண்டது. மதுரை என்றால் ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே ஒரு அம்மணி கடை,நெல்லையில் பைபாஸ் ரோட்டில் மதி கூழ் பார் என்று ஜம்பமாக எழுதப்பட்ட தள்ளுவண்டி-பைபாஸ் ரோட்டில்,சைதாப்பேட்டை கோர்ட் அருகே,எக்மோர் ஆஸ்பத்திரி அருகே,சேலம் ஒமலூர் ரோட்டில்- என்று நிறைய கூழ் பார்ட்டிகளோடு சினேகம் வைத்துள்ளேன்.

எங்கே கூழ் குடித்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் கூழமாந்தல் கிராமத்தில் எங்கள் பட்டறை ஒன்றில் காலை உணவாகக் கிடைத்த கூழுக்கு இணையாக சமீப காலத்தில் எங்கும் நான் கூழ் சாப்பிட்டதில்லை. உழைப்பாளி மக்களின் அமிர்தம் அது.

சரி.கதைக்கு வருவோம்.

இந்த வெயிலைத் துச்சமாக மதித்து தார்ச்சாலைகளில் கால்களில் சாக்குக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் ஆண்கள் பெண்கள்,கட்டிடத்தொழிலில் தலையில் சாக்குக் கட்டிக்கொண்டு களத்தில் நிற்பவர்கள் இத்தேசமெங்கும் இக்கோடையில் விவசாயம் இல்ல்லாது ஏதேனும் கூலி வேலை தேடி நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் லட்சோப லட்சம் உழைக்கும் மக்கள் (சாய்நாத்தின் கட்டுரைகளில் தவிர வேறு எங்கும் பாடல் பெறாத இத்தலைமக்கள்- அதிலும் குழைந்தை உழைப்பாளிகள்) வெயிலுக்குப் பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஸ்ட்ரா போட்டு இளநீர்க் குடித்தும் சூடு தணியாத நம்மைப் பார்த்து
சாப்பிடுங்க சார் அதுக்கென்ன நாங்க போய்க்கிட்டு இருக்கோம் ஒரு பக்கமா... என்று சொல்வதுபோல ஒரு காட்சி வந்து வந்து மனதை அறுக்கிறது.இளநீர் தொண்டையில் விக்குகிறது.

நமக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தபடி இடையிடையே தாகத்துக்கு பக்கத்தில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துக்கொண்டு அதற்கும் நம்மிடம் சாரி சொல்வதுபோல சிரித்துக்கொண்டு இளநீர்க்காய்களை வேகவேகமாக வெட்டித்தள்ளும் அந்தப் பெண்மணி வெட்டிய இளநீரை நம்மை நோக்கி நீட்டியபடி நம் பயணம் முழுவதும் கூடவே வந்து கொண்டிருக்கிறாள்.

கோடையும் கூட வர்க்க பேதத்துடன்தான் பூமிக்கு வந்து சேர்கிறது.

Article from : http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_31.html

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…

மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.

குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.

3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

4. குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

5. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.

வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.

6. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

7. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

8. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

9. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.

10. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது - என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும்.

இவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.

Article from : http://xavi.wordpress.com/2009/04/15/kid_food/

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்குப் பாடம்!

அடி மேல் அடி வைத்து, திட்டமிட்டு அரசியலுக்கு வந்த திரையுலக நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அண்மையில் திடீரென குதிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கிறோம்... பிரமிக்கிறோம்! நாம் மட்டுமா... யாருக்காக வந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரங்களும் கூட!

நாமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல முதல்வராகலாம் என்கிற கனவு அவர்களுக்கெல்லாம் இல்லாமல் இராது.

இந்தத் தருணத்தில், அதாவது டிசம்பர் 24- எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், ஒரு விஷயத்தை நினைவுகூறுவதோடு, சுட்டிக்காட்டுவதும் சாலப் பொறுந்தும்.

அது, அரசியலுக்கு வரும் சினிமா நட்சத்திரங்கள் பற்றியதே!

ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அரசியலில் ஈடுபடும், ஈடுபடுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களில் எண்ணிக்கை வெகுவாகனது.

சினிமா நடிகர் அல்லது நடிகையை பேட்டியெடுக்கச் செல்லும் நிருபர்கள் சிலர், 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வியை தவிர்த்தாலே... பலருக்கும் அரசியல் எண்ணம் குறையும் என்பது நையாண்டியாளர்களின் கருத்து!

அரசியலுக்கு வரும் நட்சத்திரங்களில் பலரும் மேடையில் முதலில் உதிர்க்கும் சொல் 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்...'

இதில், தவறேதும் இல்லை..!

ஆனால், எம்.ஜி.ஆர். பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றாமல் போனாலும் கூட அடிப்படையான ஒரு விஷயத்தைப் பின்பற்றினாலே, அடுத்தடுத்து சமூக வாழ்வில் தேர்ச்சி வந்துவிடக்கூடும்.

அதுதான் மனித நேயம்... எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவுகளிலும், புரிகின்ற ஒவ்வொரு காரியங்களிலும், அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் மனிதே நேயம் என்பது பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும்.

ஓர் அரசியல் தலைவருக்கு வேண்டியும் முழுமுதற் தகுதியே மனித நேயம் என்பது.

இந்தத் தகுதி இருந்ததால் தான் எம்.ஜி.ஆரால் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வராக முடிந்தது. இல்லையேல், இரண்டாவது முறை அவரை மக்கள் முதல்வராக்கியிருக்க மாட்டார்கள்.

வசீகரம் வெறும் முகவரியே... மனிதத்துடன் கூடிய ஆட்சியே மக்களுக்கு வேண்டியது!

Article from : http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=580:2008-12-23-19-37-45&catid=18:manitham&Itemid=24

Friday, April 10, 2009

எதிர்மறையான விமர்சனங்களை கையாளுவது எப்படி?

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி".

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

Article from : http://sandhainilavaram.blogspot.com/2009/03/blog-post_06.html

Wednesday, April 08, 2009

விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்

எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்.

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். "எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்." எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, "ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்."

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.

Article from : http://vadakaraivelan.blogspot.com/2009/03/blog-post_30.html

Tuesday, April 07, 2009

முடிந்தும் முடியாத கதைகள் : கடைசி நாட்கள்

இது ஒரு ஜப்பானிய கதை. அநுராகம் வெளியீட்டில் வந்த கதையை விழுது பத்திரிகையில் வெளியிட்டு இருந்தோம். எழுத்தாளர்.கி.ராஜநாராயணன் இந்தக் கதையை படித்து, மிகவும் சிலாகித்துப் பாராட்டினார்.

நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னர் இப்படி ஒரு சட்டம் இருந்ததாகக் கூறுகிறார்கள். வேலை செய்ய முடியாத வயதான கிழவர்களை தூக்கிக் கொண்டு போய் மலைப்பகுதிகளில் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். இந்தச் சட்டம் அமலில் இருந்த காலத்தில் நடந்த கதை இது.

தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் தந்தைக்கு மிக மிக வயதாகி தள்ளாமை வந்து விட்ட போது மலையில் கொண்டு போய் விட்டுவிட வேண்டிய நேரம் வந்தது. மகனுக்கோ அதில் விருப்பம் இல்லை. ஆனால் அப்படிச் செய்யாவிட்டால் அரச தண்டனை கிடைக்கும். என்ன செய்வது. தந்தையை முதுகில் சுமந்து கொண்டு போனான். இறக்கிவிட வேண்டிய இடம் வந்தது. மனம் உருகியது. தந்தை இங்கே தனியே தவித்து மடிவதா? அவனால் அதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. அவரைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கே திரும்பி வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் குகை போன்ற ஒரு இடத்தை உண்டாக்கி, அதில் யாருக்கும் தெரியாமல் தந்தையை இருக்கச் செய்தான். தினமும் அங்கே உணவைக் கொண்டு போய் கொடுத்து வந்தான்.

ஒருசமயம் மன்னன் ஒரு விசித்திரமான ஆணையிட்டான். பிரஜைகள் ஒவ்வொருவரும் சாம்பலான கயிறு ஒன்றை திரித்துக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் அது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. இதைப்பற்றி கேள்விப்பட்ட தந்தை மகனிடம் அதற்கு ஒரு வழி சொன்னார். மகன் அதன்படியே செய்து மன்னனிடம் பாராட்டுப் பெற்றான்.

மற்றொரு சமயம் மன்னன் ஒரு மரக்கொம்பை கொடுத்து அதன் வேர் பாகம் எது? தலை பாகம் எது? என்று கேட்டான். யாராலும் சொல்ல முடியவில்லை. மகன் தந்தையிடம் வந்து கேட்டான். அதற்கும் அவர் ஒரு வழி சொன்னார். இந்த தடவையும் மன்னனின் பாராட்டைப் பெற்றான்.

பிறகு சில காலம் கழித்து மன்னன் ஒரு கடினமான பிரச்சினையைக் கூறினான். அடிக்காமலேயே ஒலிக்கக் கூடிய மேளம் ஒன்றைச் செய்து தர வேண்டும் என்றான். இந்த முறையும் யாருக்கும் எந்த யோசனையும் வரவில்லை. மீண்டும் மகன் தந்தையிடம் சென்றான். தந்தை அதற்கும் வழி சொன்னார்.

வியப்படைந்த மன்னன் “உன்னால் எப்படி இந்த மூன்று பிரச்சினைகளுக்கும் விடைகாண முடிந்தது” என்று கேட்டான்.

“நான் வயதில் மிகவும் இளையவன். அனுபவமும் இல்லாதவன். இந்த பிரச்சினகளுக்கு விடை தெரியாதவன்.” என்று சொல்லி, தன் தந்தை தன்னுடன் இருக்கும் உண்மையைக் கூறி கண்ணீர் விட்டான்.

மன்னனின் மனம் நெகிழ்ந்தது. “இனி வயதானவர்களை மலைக்குக் கொண்டு போய் விட வேண்டியதில்லை” என்ற் உத்தரவிட்டான்.

அதுமுதல் வய்தானவர்கள் தங்கள் கடைசி நாட்களைத் தங்கள் பிள்ளைகளுடனே மகிழ்ச்சியோடு கழித்தனர். இப்படியாக கதை முடிந்தது.

வயதானவர்கள் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரா என்ற கேள்வியுடன் இன்றும் கதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது......

சரி...மூன்று பிரச்சினைகளுக்கும் அந்த தந்தை என்ன வழிகள் சொன்னார் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா..! இல்லையென்றால் வயதான மக்களிடம் கேட்டு வாருங்கள்..!

Article from : http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_9760.html

Monday, April 06, 2009

கவலையைக் குறைக்க இரு பட்டியல்

பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் தன் மகன் துரியோதனனிடம் அழகாகக் கூறுவான். "வீண் கவலை காணிட வேண்டுவோர் ஒரு காரணம் காணுதல் கஷ்டமோ".

திருதராஷ்டிரன் கூறியது போல் கவலைப்படுவதற்கு காரணங்களைப் பட்டியல் இடுவது கஷ்டமான காரியம் அல்ல. நம் ஒவ்வொருவரிடமும் நீளமான பட்டியல் இருக்கவே இருக்கிறது. பட்டியலில் ஒன்று குறையும் போது ஒன்பது சேர்ந்து கொண்டு பட்டியல் மேலும் நீள்கிறது.

இன்னொரு பழமொழியும் இருக்கிறது. "உடல் உள்ள வரை கடல் கொள்ளாக் கவலை". மனித உடல் உள்ள வரை, மனிதனுக்கு உயிர் உள்ள வரை, அவன் கவலைகளை சேர்த்து கடலில் போட்டால் அந்த கடல் அளவும் போதாதாம். செத்தால் தான் நிம்மதி என்று இந்த வழிச் சிந்தனை சொல்கிறது.

இப்படி இருக்கையில் கவலையைக் குறைக்க அல்லது மறக்க மனிதன் எத்தனையோ முயற்சி செய்கிறான். இந்தக் கவலைக் கடலைக் "குடித்தே" குறைக்க நினைப்பவர்கள் உள்ளனர். வேறெதுவும் குறைக்காது என்பது அவர்கள் வாதம். ஆனால் அந்த வாதம் முட்டாள்தனம். போதை தெளிந்து பார்க்கையிலும் கவலைகள் அப்படியே இருக்கும் (போதையால் பிரச்சினைகள் பெருகாமல் இருந்தால்).

அதிகம் கவலைப்படுபவர்களே! உங்கள் கவலையைக் குறைக்க இரு பட்டியல்கள் தயாரியுங்கள். ஒன்று உங்களிடம் உள்ள நல்லவற்றின் பட்டியல். எத்தனையோ பேருக்குக் கிடைக்காத எத்தனையோ நல்லவற்றை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதையெல்லாம் பட்டியலிட்டுப் பாருங்கள்.

"காலில்லாதவனைப் பார்க்கும் வரை செருப்பில்லை என்று கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று கூறியவனைப் போல எத்தனையோ விஷயங்களில் உங்கள் கவலை அர்த்தமில்லாதது என்பதை உணர்வீர்கள்.

ஆனால் இதிலும் ஒரு பிரச்சினை உண்டு.

ஞானி ஒருவர் தன்னிடம் கவலையுடன் வந்த மனிதனின் அறிவுக் கண்களைத் திறக்க நினைத்தார். "உனக்கு கண்கள் இருக்கின்றன. குருடாக இருக்கும் லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார். உனக்குக் காது கேட்கிறது. செவிடாக உள்ள லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப்பார்....." என்று ஆரம்பித்து அவனிடம் உள்ளவற்றின் பட்டியலை எல்லாம் சொல்லி அவை இல்லாமல் இருக்கும் லட்சக் கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்க்கச் சொன்னார். கடைசியில் "உனக்கு ஒரு அழகான கார் உள்ளது. வாகனமே இல்லாத லட்சக்கணக்கான மனிதர்களை எண்ணிப் பார்" என்று முடித்தார்.

ஆனால் கவலை குறையாத அந்த மனிதன் சோகமாகச் சொன்னான். "ஸ்வாமி! என்னிடம் உள்ள அத்தனையும் என் பக்கத்து வீட்டுக்காரனிடமும் இருக்கின்றன. ஆனால் அவனிடம் கூடுதலாக இன்னொரு காரும் இருக்கிறதே?"

இதற்கு என்ன செய்வது? இவன் பார்வை பக்கத்து வீட்டுக்காரனுடன் நின்று விடுகிறது. குதிரைக்குக் காப்பு கட்டியது போல நம் பார்வையைக் குறுக்கிக் கொள்வதும், நம்மை விட அதிர்ஷ்டசாலிகள் என்று நாம் எண்ணும் மனிதர்களுடன் மட்டுமே நம்மை ஒப்பு நோக்கிக் கொள்வதுமே பல்வேறு கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது.

அடுத்தது இரண்டாவது பட்டியல். உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள், துக்கங்கள் என்னென்ன என்பதையும் அந்தப்பட்டியலில் எழுதுங்கள். ஆரம்பத்தில் இதில் எழுத அதிகம் எதுவும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் உண்மையில் அந்தப் பட்டியல் போல் நீளமான ஒரு பட்டியலை நீங்கள் தயார் செய்யவே முடியாது. பட்டியலில் எழுதத் தேவையானவற்றைப் பெற நீங்கள் சில இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

முதலில் உங்கள் ஊரில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி ஒன்றிற்குச் சென்று ஒரு முழு உலா வர வேண்டும். அடுத்து ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப் பாருங்கள். இந்த இரு இடங்களிலும் நோயாளிகளையும் அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரையும் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகள் என்னென்ன என்று உங்களுக்குப் புரியும்.

மேலே சொன்ன கதையில் கூட அந்த மனிதன் தன்னை விட ஒரு கார் அதிகம் உள்ள பக்கத்து வீட்டுக்காரனை மேலோட்டமாகப் பார்க்காமல் உற்று கவனித்தால் அவனிடம் உள்ள எத்தனையோ குறைபாடுகள், பிரச்சினைகள் தன்னிடம் இல்லை என்பதை உணர முடியும்.

ஒரு வட்டத்திற்குள் இருந்து உழலும் போது மலையாய் தெரியும் கவலைகள் அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து கவனிக்கும் போது சிறுத்துப் போகின்றன.

யாருக்கும், என்றைக்கும், உள்ள பிரச்சினைகளை விட இல்லாத பிரச்சினைகளே அதிகம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு கவலைப்படும் நீங்கள் உங்களுக்கு இல்லாத பிரச்சினைகளின் பட்டியலையும் எடுத்துப் பாருங்கள். உறுதியாகச் சொல்கிறேன், எல்லோருடைய எல்லா பிரச்சினைகளயும் பார்க்கும் போது, அவர்களுடைய துக்கங்களை நேரடியாகக் காணும் போது, உங்கள் கவலைகளில் பல அவற்றின் முன் அர்த்தமில்லாமல் போவதைக் காண்பீர்கள்.

துரியோதனனைப் போல் கவலைப்பட நூறு காரணங்கள் நீங்கள் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நிம்மதிப் பெருமூச்சு விட ஆயிரம் காரணங்கள் உள்ளன என்பதை இந்த இரண்டு பட்டியல்களும் உங்கள் தலையைக் குட்டிச் சொல்லும்.

Article from : http://enganeshan.blogspot.com/2009/04/blog-post.html

Friday, April 03, 2009

இருமலை குணப்படுத்தும் தேன்!

இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மருத்தாக விளங்குகிறது.

'குத்திருமல்' என்று அழைக்கப்படும் தொடர்ந்து இருமலால் அவதியுறும் நபர்களுக்கு, தேன் சிறந்த மருந்தாகும்.

தொடர் இருமலை நிறுத்தும் ஆற்றம் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளின் மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

பென்சில்வேனியா மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இது தொடர்பாக மருத்துவ ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி குத்திருமலில் அவதியுற்ற, குறிப்பாக இரவு நேரங்களில் தொடர்ந்து இருமல் இருக்கும் 105 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்த குழந்தைகளை 3 பிரிவாக பிரித்து, ஒரு பிரிவு குழந்தைகளுக்கு ஒரு சிரிஞ்ச் அளவு தேனும், இரண்டாவது பிரிவு குழந்தைகளுக்கு அதே அளவிலான இருமல் மருந்தும் கொடுக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு குழந்தைகளுக்கு ஏதும் கொடுக்கப்படவில்லை.

சிறிது நாட்களுக்குப் பிறகு, இருமல் மருந்தை தொடர்ச்சியாக உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும், தேனை உட்கொண்ட குழந்தைகளுக்கு இருமல் வெகுவாக குறைந்திருந்தது தெரியவந்தது.

நமது நாட்டில் பெரும்பாலான நாட்டு மருந்துகளும் சித்த மருந்துகளும் தேனுடன் கலந்து உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பாடுவதில் நாட்டமுள்ளவர்கள், குரல் மேம்படுவதற்கு தேனை உட்கொள்கின்றனர். இவ்வாறு தேனின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Article from : http://in.tamil.yahoo.com/Health/Issues/0903/25/1090325036_1.htm

Thursday, April 02, 2009

உங்கள் மூளை எந்த பக்கம்?

ஒவ்வொரு மனிதனின் மூளைக்கும் இருவேறு பக்கங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த இரண்டு பகுதிகளும் வெவ்வேறு குணாதிசியங்களைக் கொண்டவை. வலது மூளை மற்றும் இடது மூளை என அறியப் படும் மூளையின் இந்த இரண்டு பகுதிகளும் முற்றிலும் வேறுபட்ட விதமான பணிகளை செய்கின்றன என்றாலும் இந்த இரண்டு பகுதிகளில் ஒரு பகுதி மற்ற பகுதியை ஆதிக்கம் செலுத்தவும் வாய்ப்புள்ளது. ஒரு மனிதனின் எந்த பகுதி மற்ற பகுதியை ஆக்கிரமிப்பு செய்கிறது என்பதின் அடிப்படையில் அவனது குணாதிசியங்கள் மாறுபடக் கூடும். உங்கள் மூளையின் எந்த பகுதி அதிகம் வேலை செய்கிறது அல்லது ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? ஒரு சிறிய பரிசோதனை முயற்சி இங்கே.

கீழே சில கேள்விகள் கொடுக்கப் பட்டுள்ளன. உங்கள் பதில்களை தனியாக குறித்து வைத்துக் கொள்ளவும். இந்த விடைகளில் சரியானது என்றோ தவறானது என்றோ ஏதுமில்லை. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக இந்த கேள்வி-பதில்கள் இல்லை. எனவே உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகின்றதோ, சாதாரணமான மனநிலையில் எந்த விடையை அளிப்பீர்களோ அந்த பதிலையே தாருங்கள், அது போதும். அப்போதுதான் நமது மனநிலையை நாமே சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கேள்வி எண் 1: நீங்கள் எப்படிப் பட்ட மனிதர்?

அ. மற்றவர்கள் எளிதில் ஊகிக்கக் கூடிய வகையில் எனது நடவடிக்கைகள் இருக்கும்.
ஆ. சமயத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்வேன்.

கேள்வி எண் 2: A = AM என்பது கீழ்கண்டவற்றில் எதனுடன் பொருந்தும்?

அ. P = PM
ஆ. HA = HAM

கேள்வி எண் 3: "வடக்கு - தெற்கு" என்பது எந்த இணையுடன் பொருந்தும்?

அ. மேலே - கீழே
ஆ. கிழக்கு - மேற்கு

கேள்வி எண் 4: 15 மற்றும் 6 ஆகிய எண்களுக்கு உள்ள ஒற்றுமை கீழ்க்கண்ட இணைகளில் எதற்கு உள்ளது?

அ. 23 & 5
ஆ. 23 & 14

கேள்வி எண் 5: "வேலை - விளையாட்டு" கீழ் கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. கட்டுப்பாடு - கட்டுப்பாடு இல்லாத நிலை
ஆ. தேவையான ஒன்று - தேவையில்லாத நிலை

கேள்வி எண் 6: "கோபம் - குரோதம்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. மோசம் - மிக மோசம்
ஆ. அன்பு - காதல்

கேள்வி எண் 7: "தங்கம் - மஞ்சள்" கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. ராமர் - நீலம்
ஆ. எவர்சில்வர் - வெள்ளை

கேள்வி எண் 8: "I - M " என்பது கீழ்க்கண்ட இணைகளில் எதனுடன் அதிகம் பொருந்தும்?

அ. U - R
ஆ. 9 - 13

கேள்வி எண் 9: நீங்கள் (அதிகம்) எப்படிப் பட்ட மனிதர்?

அ. நான் மற்றவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவேன்
ஆ. எனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன்

கேள்வி எண் 10: உங்களுக்கு அதிகம் பிடித்தது?

அ. உருவாக்கும் திறன்
ஆ. தெளிவான மனநிலை

இப்போது உங்கள் விடைகளை சரிபாருங்கள்.

உங்கள் விடைகளில் அதிகம் "அ" விடை வந்திருந்தால் உங்கள் வலது மூளையின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று பொருள். மாறாக "ஆ" என்று இருந்தால் இடது மூளை அதிகம் வேலை செய்கிறது என்று பொருள்.

இப்போது மூளையின் ஆதிக்கம் குறித்த பலன்களை பார்ப்போம்.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள், கலைத் திறமை, கற்பனைத் திறன் போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள், கலைஞர்களாக அதிகம் வெற்றி பெறுவார்கள். வேகமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். அதே சமயம், பல சமயங்களில் முன் யோசனை இல்லாத முடிவுகளையே எடுத்திருப்பார்கள். "எமோஷன்" மனநிலை அதிகம் கொண்டிருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தை இவர்களால் சரியாக சொல்ல முடியாது.

வலது மூளை ஆதிக்கம் உள்ளவர்கள் சற்று நிதானமாக யோசித்து முடிவு செய்ய பழகிக் கொள்வது பல பிரச்சினைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும்.

இடது பக்க மூளை உள்ளவர்கள் மிகவும் நிதானித்து தர்க்க ரீதியான முடிவு எடுக்கக் கூடியவர்கள். இவர்கள் தொழிற் முறை வல்லுனர்களாக வெற்றி பெறுவார்கள். அதே சமயம் "கலை" உணர்ச்சி இவர்களிடம் சற்று குறைவாகவே இருக்கும். ஒருவித "இயந்திர ரீதியான" வாழ்வு முறையை இவர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களால் அதிகம் விரும்பப் பட மாட்டார்கள்.

இடது மூளை ஆதிக்கம் கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் தங்கள் கவனத்தை "உருவாக்கும் திறனை வளர்க்கும் பொழுது போக்கு அம்சங்களில் (உதாரணமாக வரைதல், எழுதுதல்)" செலுத்தினால் அவர்கள் மன நெருக்கடியில் இருந்து தப்பிக்க முடியும்.

உருவாக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியான சிந்தனை இரண்டும் சரியான விகிதத்தில் இணைந்தாலே ஒருவரின் மூளை சரியாக செயல் படும். அவர் தொழில் ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும்.

ஒன்றில்லாத மற்றொன்று உபயோகமில்லாதது. எனவே, உங்களது மூளையில் எந்த பகுதியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு, உங்களை நீங்களே திருத்தி அமைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்வில் வெற்றி காணுங்கள். நன்றி.

பின்குறிப்பு: இந்த கேள்வி பதில்கள் ஒரு பரிசோதனை முயற்சி மட்டுமே. இந்த கேள்வி-பதில்கள் ஒரு துல்லியமான முடிவைத் தரும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் இல்லை. ஆனால், இந்த கேள்வி-பதில்களை மாதிரியாக வைத்துக் கொண்டு உங்களை நீங்கள் பரிசோதித்துக் கொண்டு ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்.

Article from : http://sandhainilavaram.blogspot.com/2009/04/blog-post.html

Wednesday, April 01, 2009

நீங்கள் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

ஏப்ரல் -1… தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் எல்லாம் உண்மையான புத்திசாலிகளை(அன்று ஒரு நாள் மட்டும்) முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம்(இது எப்படி இருக்கு?). நேரடியாகச் சொல்லவேண்டுமானால், இதை முட்டாள்கள் தினம் என்று சொல்வதைக் காட்டிலும், மற்றவர்களை முட்டாள்களாக்கி மகிழ்ச்சியடைபவர்களின் தினம் என்று சொல்லலாம்.

இங்கே யார் முட்டாள்கள்? யார் புத்திசாலிகள்?

ஏமாற்றுபவர் புத்திசாலி! ஏமாறுபவர் முட்டாள்!

அப்போ தானும் ஏமாறாமல் மற்றவர்களையும் ஏமாற்றாமல் இருப்பவர் முட்டாளா, புத்திசாலியா?

அப்படி பார்த்தால் புத்திசாலிகள் பல நேரங்களில் முட்டாள்களே. முட்டாள்கள் பல நேரங்களில் புத்திசாலிகளே.

முட்டாள்களாக அடிக்கடி சித்திரிக்கப்படுபவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அப்பாவிகளும் முட்டாள்கள் இல்லை. தங்கள் வேலையில், தங்கள் செயலில் அதிகபட்ச புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி நல்ல பெயர் எடுக்கும் இவர்கள், மற்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டாமல் முழி பிதுங்குவதால் அப்பாவிகளாகவும், முட்டாள் என்ற அடைமொழியோடு உலவி வருகிறார்கள்.

புத்திசாலிகளில் நூற்றுக்கு 50 சதவிகிதம் பேர் நல்ல நடிகர்கள். அவர்களுக்கு புத்திசாலிகளாக நடிக்க நன்றாக வரும். (அதுவும் திறமைதானே என்கிறீர்களா?) ஒரு விஷயம் தெரியுமா நல்ல புத்திசாலி முட்டாள் போன்றே தோற்றம் தருகிறார்.அதனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சரி, புத்திசாலிகள் வேறு கெட்டிக்காரர்கள் வேறா?

இது முட்டையா கோழியா போன்ற சிக்கலான பிரச்னை. புத்திசாலிகள் தங்கள் வேலையில், தாங்கள் சார்ந்த இடத்தில் திறமையுடையவர்களாக காட்சி அளிக்கிறார்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடையத் திறமையை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன், அதில் தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்கிறான் பாருங்கள் அவனை கெட்டிக்காரன் என்று வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு அரசியல்வாதிகள் நல்ல உதாரணம். இவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ இல்லையோ கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம் காரியத்தில் கண்ணாய் இருந்து, எப்போதும் அதை தனக்குச் சாதகமாகவே ஆக்குபவர்கள் கெட்டிக்காரர்கள். இவ்விஷயத்தில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் போதாது.

இங்கு திறமை என்பது அடிப்பட்டு நேரத்தை, காலத்தை, மனிதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதத்திற்கு அரியணை ஏறும் அரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது.

புத்திசாலிதனத்திற்கு கெட்டிக்காரத்தனத்திற்கும் நம் திரைத்துறையில் இருநதே உதாரணம் தரலாம்.

ரஜினியும் கமலும் சமகாலத்தவர்களாக இருந்தாலும், ரஜினிக்கு எங்கும், எப்போதும் முதலிடமும், கமலுக்கு அடுத்த இடமும் ஏன் தரப்படுகிறது. நிச்சயமாகச் சொல்லலாம் திரைத்துறை திறமையைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை விட புத்திசாலி இல்லை.

கமல் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும், நட்சத்திரமாக மின்னவும் அதற்குத் தேவையான விஷயங்களைத் தேடித்தேடி அறிந்து சேர்த்துக் கொண்டவர். கலைஞர் குறிப்பிட்டபடி தன்னை கலைஞானியாக காட்டிக்கொள்ள முயல்பவர்.

ரஜினி அப்படியா? இல்லவே இல்லை. அவர் அளவுக்கு அறிந்ததையே போதும் என்று நினைத்தவர். அதையே முதலீடாக ஆக்கி வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றவர். அவரிடம் புத்திசாலித்தனத்தைவிட தன்னம்பிக்கையும், மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ளாத தன்மையும் இருந்தது.

கமல் படங்களில் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். இது பல நேரம் நம்மை குழப்பிவிடும்.
ரஜினியின் எந்தப் படமாவது புரியவில்லை என புகார் வந்ததுண்டா? நன்றாக இல்லை என்று வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் படத்தையும் அவருடைய ரசிகர்கள் ஓட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர் நெஞ்சில் ஒட்டியவர்.
ரஜினியைப் போலவே ரஜினி ரசிகர்கள் சரியா?

கமலைப்போலவே கமல் ரசிகர்கள். ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் தங்கள் தலைவர் படமானாலும் ஒதுக்கி ஓரம் கட்டிவிடுவார்கள்.

ரஜினியைப் போன்ற சாதாரணமானவர்கள் நிறைந்த நாடு இது. இது ரஜினியின் முதலிடத்திற்கு காரணம்.கமலைப் போல அதிகம் சிந்திப்பவர்கள் குறைவாக உள்ள நாடு இது. அதே சமயம், அவருடையத் திறமையை யாரும் மொத்தமாக ஒதுக்கிவிடாமல் இரண்டாம் இடத்தை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரவர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இருவருமே போராட வேண்டும் என்பதுதான் மக்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகம் சங்கதி.

ஆக, கமல் புத்திசாலியாகவும் இருக்கிறார். சில நேரம் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். ரஜினியோ எப்போதுமே கெட்டிக்காரராகவே இருக்கிறார்.

தன்னிடம் உள்ள திறமையை அறியாதவன், தன்னுடைய திறமையைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்தாதவன் முட்டாள்.

தன்னுடையத் திறமையை அறிந்தவன், மேலும் தேவையானத் திறமைகளை வளர்த்துக் கொள்பவன், அதை தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தி வெல்பவன் புத்திசாலி.

அட, திறமையே இல்லாவிட்டாலும் ஏதோ திறமை தனக்குள் ஒளிந்திருப்பதுபோல பாவனை காட்டியாவது உச்சத்தை எட்டுபவன் கெட்டிக்காரன்.

நீங்கள் யார் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

Article from : http://www.tamilvanan.com/content/2009/03/30/april-fools-day-who-are-you/