Wednesday, April 08, 2009

விட்டுக் கொடுத்தலும் கேட்டுப் பெறுதலும்

எல் கே ஜி படிக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது பெண் குழந்தையாக இருந்தால் தன்னை ஒரு டீச்சராகக் கருதிக் கொண்டு டீச்சரைப் போலவே நடை உடை பாவனைகளை அமைத்துக் கொள்ளும். ஆண் குழந்தையாக இருந்தால் அவனது ஹீரோ வேன் டிரைவராகவோ அல்லது கார்ட்டூன் கேரக்டராகவோ அல்லது தல, தளபதி போன்றவர்களாகவோ இருப்பர்.

இது முதன்முதலில் குழந்தையின் மனதில் ஏற்படும் ஆதர்ச பிம்பம். நம்மால் முடியாததை சாதிப்பதின் மீது கட்டமைக்கப்படுவது.நாளாக நாளாக வேறு வேறு ஆட்கள் வயதைப் பொறுத்து அந்த இடத்தைப் பிடிக்கிறார்கள்.

ஆனால் எப்போதும் அப்பாவோ அல்லது அம்மாவோ அவர்களுடைய பங்களிப்பைப் பொறுத்து நமது வாழ்நாள் ஹீரோ ஆகிவிடுகிறார்கள். இதில்தான் பிரச்சினைகள் தோன்றுகிறது இப்போது.

எனக்குத் தெரிந்த தம்பதியர். அவனது அப்பாவின் பிம்பமாக குடும்பம் நடத்த முயலுகிறான். அப்பாவின் நடவடிக்கையைப் போலவே அனைத்தயும் அமைத்துக் கொள்கிறான். அவனது அம்மா கிராமத்து ஆள் என்பதால் வீட்டில் அப்பா சொல்வதை அம்மா கேட்பதுதான் வழக்கம்.

மனைவி கதை நேர்மாறு. அவளது அப்பா குடும்பப் பொறுப்பற்றவர். தனது சம்பளத்தை மாதாமாதாம் வீட்டிற்குக் கொடுத்தால் போதும் என்பது அவரது எண்ணம். அவளது அம்மா உத்தியோகத்திற்கும் சென்று வந்து வீட்டு நிர்வாகம் அனைத்தையும் திறம்படச் செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைத்து இப்பொழு கடைக் குழந்தையை நல்ல முறையில் படிக்க வைக்கிறார்.

எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது எங்கு பிரச்சினை?

தம்பதியர் இருவரும் அவரவர் குடும்பம் போலவே தங்கள் குடும்பத்தையும் நடத்த முயலுகின்றனர். "எங்க வீட்டுல் எல்லாம் இப்படி இல்லை. நாங்க எல்லாம் அப்படிச் செய்ய மாட்டோம்." எது ஒன்று நடந்தாலும் அவனது அப்பாவிடம் சொல்லி விடுகிறான் அவர் நல்லது செய்கிறேன் என மேலும் விரிசலை உண்டாக்குகிறார். அவளும் அம்மாவிடம் சொல்லுகிறாள், அம்மாவும் அப்படியே. இருவர் சொல்லுவதும் ஒன்றே, "ஆரம்பத்துலேயே பிடிய விட்டுக் குடுத்துடாத, பின்னால சிரமம்."

இல்லறம் என்பது எத்தனை காரணிகளை உள்ளடக்கியது? வாழிடம், செய்யும் வேலை, மன நிலை, உடல் நிலை, பொருளாதாரம், நண்பர் வட்டம், படிப்பு, வேறு ஆர்வங்கள் என எண்ணிலடங்கா. உங்களுக்குச் சரியாக வந்த ஒன்று எல்லோருக்கும் அவ்வாறே என நினைப்பது சரியல்ல.

மேலும் தம்பதியர் இருவரும் கூடிப் பேசி மனம் விட்டு சிலதை முடிவு செய்து அதன்படிதான் நடக்க வேண்டும். இப்படித்தான் இருப்பேன் என ஆரம்பத்திலியே செய்யும் பிடிவாதமான முடிவுகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

சில வருடங்கள் கழித்து நினைத்துப் பார்த்தால் இந்தச் சில்லறை விஷயத்திற்கா அன்று பிரிந்து போகும் அளவுக்குச் சண்டை போட்டோம் என வெட்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுதான் இல்லறத்தின் அடிநாதம்.

Article from : http://vadakaraivelan.blogspot.com/2009/03/blog-post_30.html

No comments:

Post a Comment