Thursday, July 07, 2016

நெஞ்சம் மறப்பதில்லை- 6: எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ்!

-பெரு துளசிபழனிவேல்


‘முத்துக்கு முத்தாக
சொத்துக்கு சொத்தாக
அண்ணன் தம்பிபிறந்து வந்தோம்... கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம்... ஒண்ணுக்கள் ஒண்ணாக'

‘அன்புச் சகோதரர்கள்' படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார்.

இவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அத்தனையும் மனித வாழ்க்கையில் மறக்க முடியாத ஒதுக்க முடியாத உன்னத உறவுகளை கொண்டதாக இருக்கும். நல்லகணவன், பாசமான அண்ணன், அன்பான அப்பா, மறக்க முடியாத மாமனார், கம்பீரமான தாத்தா, கௌரவமான போலீஸ் அதிகாரி, ஊர் போற்றும் மனிதர், கொடூரமான வில்லன், மற்றும் மந்திரவாதி, புராண, இதிகாச கதாபாத்திரங்கள் என்று அத்தனை வேடங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தார்.

இவருக்காக பல கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. சில கதாபாத்திரங்கள் இவர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என இவரைத் தேடி வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட உன்னத கலைஞர் சிறந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ்.

இவர் தமிழ், தெலுங்கு என்று இருநூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்ததனைப் படங்களும் பிரபலமான சூப்பர் ஹிட்டான படங்களாகும். விஜயா வாஹினி தயாரித்த ‘பாதாள பைரவி' (1951) படம்தான் எஸ்.வி.ரங்காராவ் நடித்து அறிமுகமான முதல் தமிழ்ப் படம். இதில் மந்திரவாதியாக வேடமேற்று நடித்தார்.

‘மாயாபஜார்' படத்தில் கடோத்கஜனாக காமெடி கலந்த வேடத்தில் நடித்தார். ‘சம்பூர்ண இராமாயணம்' படத்தில் இராவணனாக நடித்தார். ‘மிஸ்ஸியம்மா' படத்தில் வாடகைக்கு வருபவர்களிடமும் பாசம் காட்டும் வீட்டு உரிமையாளர் வேடத்தில் நடித்தார். ‘கற்பகம்' படத்தில் அப்பாவாகவும், நல்ல மாமனாராகவும் இருமாறுபட்ட தோற்றத்தில் நடித்தார்.

நானும் ஒரு பெண் படத்தில் கருமைநிறம் கொண்ட மருமகளை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் நல்ல மாமனாராக நடித்தார். ‘கைகொடுத்த தெய்வம்' படத்தில் வெகுளிப்பெண் (சாவித்ரி)யை பெற்றெடுத்துவிட்டு அவஸ்தைப்படும் தந்தையாக நடித்திருந்தார். ‘அன்னை' படத்தில் நடிப்பின் இலக்கணம் பி.பானுமதிக்கு ஜோடியாக நடித்தார்.

‘எங்கள்வீட்டுப் பிள்ளை' படத்தில் எம்.ஜி.ஆரின் மாமனாராக நடித்தார். ‘படிக்காத மேதை' படத்தில் உலகம் தெரியாத ஒரு அப்பாவி மனிதனுக்கு அன்பைக் காட்டும் மாமாவாக நடித்தார். ‘நீதிக்குப்பின் பாசம்' படத்தில் கௌரவமான உயர் போலீஸ் அதிகாரியாகவும், பிள்ளைகளுக்கு பிரியமான தந்தையாகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும், வேறுபாடுகளைக் காட்டி நடித்தார். ‘கண் கண்ட தெய்வம்' படத்தில் தன்னைச் சார்ந்து வாழும் அன்பான தம்பிக்கு நல்ல அண்ணனாகவும், அவரது குடும்பத்திற்கு பாதுகாவலராகவும் நடித்திருந்தார்.

‘அன்னை இல்லம்' படத்தில் சிவாஜிக்கு தந்தையாகவும், மனைவி எம்.வி.ராஜம்மாவிற்கு நல்ல கணவராகவும் நடித்திருந்தார். விஜயா சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர்.நடித்த ‘நம்நாடு' படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லனாகவும், ‘ராஜா' படத்தில் கொடூரமான வில்லனாக சிவாஜியுடன் மோதுபவராகவும் நடித்திருந்தார். இப்படி பலபடங்களில் பல்வேறு விதமான வேடங்களை ஏற்று தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார் எஸ்.வி.ரங்காராவ்.

டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷணன் தனது படத்தில் எஸ்.வி. ரங்கராவ் தான் நடிக்க வேண்டும் என்பதற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கவிருந்த ஒரு பெரியபடத்தை இயக்குகின்ற வாய்ப்பையே இழந்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களும், டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களும் தொடர்ந்து தங்களது படங்களை வெற்றிப் படங்களாக்கி வெற்றி வலம் வந்து கொண்டிருந்த காலகட்டமது.

இருவரும் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டுமென்று விரும்பினார்கள். எம்.ஜி.ஆர். அவர்களும் கதை கேட்டார். அதற்காக அப்போது ரெடி பண்ணி வைத்திருந்த ‘கற்பகம்' படத்தின் கதையைப் போய் சொன்னார் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். எம்.ஜி.ஆரும் முழுமையாக கதையை கேட்டுவிட்டு நடிக்கச் சம்மதித்தார். அதன்பிறகு மற்ற கேரக்டர்களில் யார்? யார்? நடிப்பது என்று கலந்து பேசினார்கள். அப்போது டைரக்டர் கே.எஸ்.ஜி. ‘கற்பகம்' படத்தில் வரும் மாமனார் கேரக்டரில் நடிகர் எஸ்.வி.ரங்காராவை நடிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதற்கு எம்.ஜி.ஆர்.அவர்கள் மற்ற கேரக்டர்களுக்கு உங்கள் விருப்பபடி யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் மாமனார் கேரக்டரில் டி.எஸ்.பாலையா மட்டும் நடிக்கட்டும் என்றார்.

அதற்கு கே.எஸ்.ஜி. யோசித்து சொல்வதாக வீட்டிற்கு வந்துவிட்டார். வந்த சில நாட்கள் யோசித்துவிட்டு இந்த மாமனார் கேரக்டருக்கு எஸ்.வி.ரங்காராவ்தான் பொருத்தமாக இருப்பார் என்னை மன்னித்துவிடுங்கள் என்றார் டைரக்டர். எம்.ஜி.ஆரும் நீங்களும் என்னை மன்னித்துவிடுங்கள் இந்தப் படத்திற்கு வேறு யாரையாவது கதாநாயகனாகப் போட்டு படத்தை எடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

அதனால்தான் ‘கற்பகம்' படத்தில் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர்.அவர்கள் டி.எஸ்.பாலையாவை சிபாரிசு செய்ததற்கு காரணம், ஆரம்ப காலத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு படத்தில் டி.எஸ்.பாலையாவும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அப்போது பாலையா அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடிக்கட்டும், நானும் மற்றொரு கேரக்டரில் இணைந்து நடிக்கிறேன் என்று எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கு நன்றிகடன் செலுத்தும் விதமாகத்தான் அவரை சிபாரிசு செய்திருக்கிறார் என்பது பின்னாளில் தெரிய வந்தது.

நடிகர் எஸ்.வி.ரங்காராவ் 3.07.1918 ஆம் ஆண்டு எஸ்.கோட்டீஸ்வரராவ் - நரசம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். ஆந்திராவிலுள்ள நுஜ்வித் என்ற கிராமம் தான் இவருடைய பிறப்பிடமாகும். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என்று 11 பேர். மனைவி பெயர் லீலாவதி தேவி, மகன் (அமரர்) கோட்டீஸ்வரராவ், மகள்கள் விஜயலட்சுமி, பிரமிளாதேவி. இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பி.எஸ்.ஸி.பட்டப்படிப்பை முடித்ததும் காக்கி நாடாவிலுள்ள யங்மேனஸ் ஹேப்பி கிளப்பில் சேர்ந்து தெலுங்கு மொழி, வசன உச்சரிப்பு, குச்சுபிடி நடனம், நாட்டியம், நாடக நடிப்பு ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார்.

இந்தப் பாசறையில் சேர்ந்து பயிற்சி பெற்று வெளிவந்து. பின்னாளில் புகழ் பெற்றவர்கள் அஞ்சலிதேவி, இயக்குனர் பி.புல்லையா, இசையமைப்பாளர் ஆதி நாராயணராவ்.

எஸ்.வி.ரங்காராவ் படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள், நிர்வாகத்தினரிடமிருந்து ஒழுக்கமான மாணவர் என்று நற்சான்றிதழ் பெற்றிருக்கிறார்.

இவர் ‘சதுரங்கம்', பாந்தவியா' (தமிழில் வெளிவந்த கண்கண்ட தெய்வம்) போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

எஸ்.வி. ரங்காராவ் அவர்கள் சினிமா ஆசையில் சென்னை வந்தபோது ஜெமினி ஸ்டுடியோவிற்கு போய் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஆர். கணேஷ் (இவர் பின்னாளில் ஜெமினிகணேசன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்) என்பவரிடம் தான் முதன் முதலில் வாய்ப்பு கேட்டிருக்கிறார். எந்த வாய்ப்பும் இப்போது இல்லை என்று திருப்பி அனுப்பியிருக்கிறார். எஸ்.வி. ரங்காராவ், திருவேலிக்கேணி, தியாகராயர் நகரில் (அபிபுல்லா ரோடு) தான் தனது இறுதிக் காலத்தில் குடும்பதாருடன் குடியிருந்திருக்கிறார்.

1946ஆம் ஆண்டு ‘விருதினி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார் எஸ்.வி.ரங்காராவ். அவர் கடைசியாக நடித்த படம் சிவாஜி நடித்த ‘சிவகாமியின் செல்வன்' (1974) சுமார் 28 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தனது கலைப்ப பயணத்தை தொடர்ந்த ரங்காராவ் 18.07.1987 ஆம் ஆண்டு காலமானார். அதாவது அவர் பிறந்ததும் மறைந்ததும் இதே ஜூலை மாதத்தில்தான்!

http://tamil.filmibeat.com/specials/nenjam-marappathillai-6-040944.html?utm_source=spikeD&utm_medium=LT&utm_campaign=adgebra


Monday, November 24, 2014

ருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..!

தமிழ் சினிமா வரலாறு பல விசித்திரங்களையும் வினோதங்களையும் கொண்டது. தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ஆர், திரையுலகில் நுழைந்து தன் முகம் காட்டுவதற்குள் 30 வயதைத் தாண்டியிருந்தார். நடிகவேள் எம்.ஆர்.ராதா திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே, சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இப்படியான வினோதங்களில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரே ஒரு படத்துக்காக ஓர் இயக்குனர் காலம் முழுவதும் போற்றப்பட்டார், கொண்டாடப்பட்டார் என்றால், அந்தப் பெருமை ருத்ரய்யாவை மட்டுமே சேரும். அந்தப் பெருமைக்குரிய ருத்ரய்யா நேற்று மறைந்துவிட்டார்.

ருத்ரய்யா இயக்கியது இரண்டே படங்கள்தான். ‘அவள் அப்படித்தான்’ மற்றும் ’கிராமத்து அத்தியாயம்’. ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா என்று அன்றைக்கு உச்சத்தில் இருந்த மூன்று பெரிய திரைநட்சத்திரங்களின் கால்ஷீட் கிடைக்கும்போது, ருத்ரய்யா நினைத்திருந்தால் வெற்றிகரமான ஒரு கமர்ஷியல் சினிமாவைக் கொடுத்திருக்கமுடியும். ஆனால் தனித்துவமான ‘அவள் அப்படித்தான்’ என்ற திரைப்படத்தைக் கொடுத்ததால்தான் ருத்ரய்யா தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கமுடியாத ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறார். ‘அவள் அப்படித்தான்’ படம் பலவிதங்களில் தனித்துவம் பெற்றது,

தமிழ் சினிமாவும் தமிழ் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கியதுதான் அந்தப் படத்தின் முதல் வெற்றி. பெண்கள் எப்போதும் ஆண்களால் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், வெட்கமும் நாணமும் பின்ன குழையக் குழைய நடக்கவேண்டியவர்கள், படித்த பெண் திமிர் பிடித்தவள், பெண்கள் ஆண்களைப் போல் உடை அணியக்கூடாது, பெண்களின் தாலி ஆர்.டி.எக்ஸ், அணுகுண்டைவிட வலிமையான ஆயுதம், பெண்ணின் தாலி மீது யாராவது கை வைத்தால் போதும், இடி இடித்து, மின்னல் மின்னி, கோயில் மணிகள் தானாக அடித்து பிரளயமே உருவாகும், காதலிக்கும்போதும் டூயட் காட்சிகளிலும் நவீன ஆடைகளும், திருமணம் ஆனபிறகு தழையத் தழைய புடவையும் அணிபவள்தான் பெண் என்றெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிவைத்த பிம்பங்கள் ஏராளம்.

ஆனால் ‘அவள் அப்படித்தான்’ அதையெல்லாம் அடித்து உடைத்தது. பெண்ணுக்கான சுயத்தை இயல்பாக முன்வைத்தது. ஒரு பெண்ணுக்கு ஒருமுறைதான் காதல் வரும் என்ற அபத்தமான சூத்திரத்தைத் தகர்த்தது.

எல்லா தமிழ் சினிமாக்களிலும் பெண்களின் வாழ்க்கையை ஆண்களே தீர்மானித்துக்கொண்டிருக்க, ‘அவள் அப்படித்தான்’ சுயமாகத் தீர்மானிக்கும், ஆளுமை மிக்க பெண் பாத்திரத்தை முன்வைத்தது.

கற்பு, கலாசாரம் என்ற கற்பிதங்களைத் தாண்டி பாலியலை வெளிப்படையாகப் பேசியது. ஆண்களின் வஞ்சத்தைச் சுட்டிக்காட்டியது. இன்னொருபுறம் போலி முற்போக்கின் ஆர்வக்கோளாறுகளையும் மிகைத்தன்மையையும் விமர்சித்தது.

”வித்தியாசமா இருக்கிறமாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்” என்ற ஒரு வசனம் போதும். ‘அவள் அப்படித்தான்’ படத்தின் பலங்கள் என்றால் தனித்துவமான கதை, கூர்மையான வசனங்கள், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் இசை எனப் பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களின் இறுதிக்காலகட்டம் அது. ஆனாலும் ‘அவள் அப்படித்தான்’ ஒளிப்பதிவுக்கான சிறந்த விருதைப் பெற்றது.

வணிகரீதியாக ‘அவள் அப்படித்தான்’ வெற்றிகரமான படமில்லை. அதேநேரத்தில் வெளியான கமல்ஹாசனின் ‘சிவப்பு ரோஜாக்கள்’ மாபெரும் வெற்றியடைய, ‘அவள் அப்படித்தான்’ மோசமான எதிர்வினைகளையே சந்தித்தது. அதற்கு முக்கியமான காரணம், தமிழ் சினிமா ரசிகர்கள் ஊறிப்போயிருந்த பண்பாட்டு போலித்தனத்தை, நிர்வாணமாக அது அம்பலப்படுத்தியதுதான். ஆனால் அந்த நேரத்தில் சென்னைக்கு வந்திருந்த, இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மிருணாள்சென், ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் புகழ்ந்து பேட்டியளித்திருக்கிறார்.

ரஜினி தான் நடித்த சிறந்த படங்களாக ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ ஆகியவற்றைக் குறிப்பிடும்போது ‘அவள் அப்படித்தானை’ப் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் ரஜினிக்கு இது முக்கியமான படம். ரஜினி அவ்வளவு எதார்த்தமாக நடித்து அசத்தியிருப்பார். கமலின் திரையுலகச் சாதனை பற்றிக் குறிப்பிடுகிற பலரும்கூட ‘அவள் அப்படித்தான்’ படத்தைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் நடிப்பைத் தாண்டி, இந்தப் படம் உருவாகுவதற்கு ஒவ்வொருகட்டத்திலும் கமல் உழைத்திருக்கிறார். ஸ்ரீப்ரியாவுக்கு இது மிக மிக முக்கியமான படம் என்பதைச் சொல்லவே தேவையில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களும் சினிமாக்காரர்களும்கூட கவனம் செலுத்தாத ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் இன்னமும் பேசப்படுகிறது, கொண்டாடப்படுகிறது, விவாதிக்கபடுகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் நவீன இலக்கிய வெளியில் தொடர்ச்சியாக இயங்கிவரும் திரைவிமர்சகர்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுதி எழுதிக் கவனப்படுத்தியதுதான் என்பதை நன்றியுடன் நினைத்துப்பார்க்கவேண்டும்.

‘அவள் அப்படித்தான்’ உள்ளடக்கத்தைப் போலவே அது படமாக்கப்பட்டவிதமும் சிறந்த முன்மாதிரிதான். இந்தப் படத்துக்கென்று தனியாக காஸ்ட்யூம் டிசைனர் இல்லை. ரஜினியும், கமலும், ஸ்ரீப்ரியாவும் அன்றைக்கு என்ன உடை அணிந்துவருகிறார்களோ, அதுதான் அன்று எடுக்கப்பட்ட காட்சிக்கான உடை. இதேபோல் ‘அவள் அப்படித்தா’னுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. முதன்முதலாக ஓர் ஆவணப்பட இயக்குனரை நாயகப் பாத்திரம் (கமல்) ஆக்கியிருப்பார் ருத்ரய்யா. உண்மையில் அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆவணப்பட இயக்குனர் என்ற வகையினத்தைப் பற்றித் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் ருத்ரய்யாவின் துணிச்சலால்தான் சாத்தியமானது.

அவர் இயக்கிய இரண்டு படங்களில் இரண்டாம் படமான ’கிராமத்து அத்தியாயம்’ அவருக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை. அது முதல் படத்திற்கு மாறாக முற்றிலும் சுமாரான படம் என்றுதான் சினிமா விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள். ஒரு வெற்றிகரமான இயக்குனராக இல்லாததாலோ என்னவோ அதற்குப்பிறகு ருத்ரய்யா படங்கள் எதையும் இயக்கவில்லை. ஆனால் ருத்ரய்யா என்ற ஆளுமையை நினைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், எதிர்காலத் தலைமுறைக்குக் கற்பிப்பதற்கும் ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே போதும்/


இளையராஜாவின் இசையில் என்றும் நம் நினைவுகளை இனிக்கவைக்கும் ‘அவள் அப்படித்தான்’ பாடல் வரிகள் இவை...

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒருகதை என்றும் முடியலாம்.

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே!


ருத்ரய்யா காலாகாலமும் நம் நினைவுகளில் தொடரக்கூடியவர்.

- சுகுணாதிவாகர்


Article from : news.vikatan.com/article.php?module=news&aid=35045&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

Tuesday, June 02, 2009

சுஜாதாவின் பத்து கட்டளைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.

குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Article from : http://www.sureshonline.com/2008/03/சுஜாதாவின்-பத்து-கட்டளைக

Monday, April 20, 2009

கோடையும் அப்படித்தான்...

கோடை வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. Global warming அச்சுறுத்துகிறது. வெயிலில் அரைநாள் பைக்கில் சுற்றினாலே உடம்பு படுத்துவிடுகிறது. பெண்களில் பலருக்கு யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல கோடையின் வருகை அவர்களது உடம்பில் ஏற்படும் மாற்றங்களால் உபாதைகளால் முன்னறியப்படுகிறது. டினோசார் போன்ற அத்தப் பெரிய ஜீவராசிகளே பருவநிலை மாற்றங்களால்தான் செத்து மடிந்தன என்பதை படிக்கும்போது ஒப்புக்கொண்டதைவிட இந்த வெயிலில் அலையும்போது சந்தேகத்துக்கிடமில்லாமல் ஏற்றுக்கொள்கிறோம்.

வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்க 36 வழிகள் என்று நம்முடைய வாரப்பத்திரிகைகள் இலவச இணைப்புகள் வழங்குவார்கள். மோர்,இளநீர்,குளிர்பானங்கள்,தர்ப்பூசணி போன்றவை நம் காவல்தெய்வங்களாக கோடையில் கை கொடுக்கும். இதெல்லாம்விட நிறைய தண்ணீர் குடிப்பதுதான் அவசியம் என்று எஸ்.வி.வேணுகோபால் போன்றவர்கள் நமக்குச் சொல்லுவார்கள். (அவர் யார் என்று கேட்கிறீர்களா 'உடலும் உள்ளமும் நலம்தானா?' என்கிற அற்புதமான சிறுநூலை எழுதியவர். உடல் நலம் மனநலம் இரண்டைப்பறியும் ஒருங்கே பேசிவரும் ஒரு சமூக சேவகர்.)

எங்கள் கரிசல்காட்டில் கோடைக்கு பானக்கரம் என்று ஒரு பானம் தயாரிப்பார்கள் கருப்பட்டியும் புளியும் மட்டுமே கரைத்த நீர். என்ன தேவாமிர்தமாக இருக்கும்?அதை விட்டால் புளிச்சாணி என வாய்ச்சொல்லால் வாங்கப்படும் புளிச்ச தண்ணி - இது அரிசிச் சோற்றுப் பானையில் பழைய சோற்றுடன் ஊறி ஊறிப் புளித்த தண்ணீர்தான் கோடையில் இதில் பச்சைத்தண்ணி கலந்து புளிப்பை மட்டுப்படுத்தி கொஞ்சம் உப்பு சேர்த்துக் குடிக்கக் குடிக்க அது கொண்டா கொண்டா என்று சொல்லும். இதன் நாகரீக வடிவம் அல்லது மத்திய தர வர்க்க வடிவம்தான் கலைவாணர் குடிச்சுப் பழகணும் என்று பாடிய நீராகாரம்.

நம்மைப்போன்ற ஊர் சுற்றிகளுக்கு இப்போது வரப்பிரசாதமாக அமைந்திருப்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும் கம்பங்கூழ். அந்தத் தள்ளுவண்டிகளைக்கண்டால் நம்ம கால்கள் தாமே அங்கு கொண்டு சென்று நம்மைச் சேர்த்து விடுகின்றன. எல்லா இடங்களிலும் சுத்தமான கூழ் கிடைப்பதாகக் கூற முடியாது. குடித்துப் பார்த்து நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். விவரமில்லாமல் மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் ஒருமுறை கம்பங்கூழ் குடித்து அன்றே புடுங்கிக் கொண்டது. மதுரை என்றால் ஆரப்பாளையம் பஸ் நிலையம் அருகே ஒரு அம்மணி கடை,நெல்லையில் பைபாஸ் ரோட்டில் மதி கூழ் பார் என்று ஜம்பமாக எழுதப்பட்ட தள்ளுவண்டி-பைபாஸ் ரோட்டில்,சைதாப்பேட்டை கோர்ட் அருகே,எக்மோர் ஆஸ்பத்திரி அருகே,சேலம் ஒமலூர் ரோட்டில்- என்று நிறைய கூழ் பார்ட்டிகளோடு சினேகம் வைத்துள்ளேன்.

எங்கே கூழ் குடித்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் கூழமாந்தல் கிராமத்தில் எங்கள் பட்டறை ஒன்றில் காலை உணவாகக் கிடைத்த கூழுக்கு இணையாக சமீப காலத்தில் எங்கும் நான் கூழ் சாப்பிட்டதில்லை. உழைப்பாளி மக்களின் அமிர்தம் அது.

சரி.கதைக்கு வருவோம்.

இந்த வெயிலைத் துச்சமாக மதித்து தார்ச்சாலைகளில் கால்களில் சாக்குக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் ஆண்கள் பெண்கள்,கட்டிடத்தொழிலில் தலையில் சாக்குக் கட்டிக்கொண்டு களத்தில் நிற்பவர்கள் இத்தேசமெங்கும் இக்கோடையில் விவசாயம் இல்ல்லாது ஏதேனும் கூலி வேலை தேடி நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் லட்சோப லட்சம் உழைக்கும் மக்கள் (சாய்நாத்தின் கட்டுரைகளில் தவிர வேறு எங்கும் பாடல் பெறாத இத்தலைமக்கள்- அதிலும் குழைந்தை உழைப்பாளிகள்) வெயிலுக்குப் பாதுகாப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஸ்ட்ரா போட்டு இளநீர்க் குடித்தும் சூடு தணியாத நம்மைப் பார்த்து
சாப்பிடுங்க சார் அதுக்கென்ன நாங்க போய்க்கிட்டு இருக்கோம் ஒரு பக்கமா... என்று சொல்வதுபோல ஒரு காட்சி வந்து வந்து மனதை அறுக்கிறது.இளநீர் தொண்டையில் விக்குகிறது.

நமக்கு இளநீர் வெட்டிக்கொடுத்தபடி இடையிடையே தாகத்துக்கு பக்கத்தில் வைத்திருக்கும் பிளாஸ்டிக் குடத்திலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்துக்கொண்டு அதற்கும் நம்மிடம் சாரி சொல்வதுபோல சிரித்துக்கொண்டு இளநீர்க்காய்களை வேகவேகமாக வெட்டித்தள்ளும் அந்தப் பெண்மணி வெட்டிய இளநீரை நம்மை நோக்கி நீட்டியபடி நம் பயணம் முழுவதும் கூடவே வந்து கொண்டிருக்கிறாள்.

கோடையும் கூட வர்க்க பேதத்துடன்தான் பூமிக்கு வந்து சேர்கிறது.

Article from : http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_31.html

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது…

மொட்டை மாடியில் மாலை வேளையில் வெறுமனே காற்று வாங்க செல்லும் போது பார்க்க முடியும் நகரத்து மொட்டை மாடிகள் ஒவ்வொன்றிலும் சாப்பாடு உண்ணச் சொல்லிக் குழந்தைகளைக் கெஞ்சிக் கொண்டிருக்கும் தாய்மார்களை.

குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே ! மூன்று கண்ணன் வரான் சாப்பிடு என பயமுறுத்தியோ, சாக்லேட் வாங்கித் தரேன் சாப்பிடு என சொல்லி ஆசைகாட்டியோ எப்படியேனும் நாலுவாய் சாப்பிடால் போதும் என அல்லாடும் மனது அன்னையர்க்கே உரியது.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.

3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

4. குறிப்பாக 90/10 முறையைக் கடைபிடிக்க வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். அதாவது 90 விழுக்காடு ஆரோக்கியமான உணவும் மீதி பத்து விழுக்காடு இனிப்பு, பொரியல் போன்றவற்றையும் உண்பதும் நல்லது. அந்த இனிப்பு வகைகளிலும் அதிக கொழுப்பான, செயற்கைப் பொருட்கள் அதிகம் அடங்கியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

5. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.

வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.

6. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

7. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

8. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

9. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.

10. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். நான் கழுவிய காரெட் இது - என்பது போன்ற மன ரீதியான தொடர்பு ஏற்படும்.

இவற்றில் உங்களுக்கு வசதியான, பிடித்தமான சில வழிகளை முயன்று பாருங்கள். உங்கள் உணவூட்டும் வேலை எளிதாகக் கூடும்.

Article from : http://xavi.wordpress.com/2009/04/15/kid_food/

அரசியலுக்கு வரும் நடிகர்களுக்குப் பாடம்!

அடி மேல் அடி வைத்து, திட்டமிட்டு அரசியலுக்கு வந்த திரையுலக நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அண்மையில் திடீரென குதிக்கும் நட்சத்திரமாக இருந்தாலும் சரி... அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கிறோம்... பிரமிக்கிறோம்! நாம் மட்டுமா... யாருக்காக வந்திருக்கிறார்களோ அந்த நட்சத்திரங்களும் கூட!

நாமும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல முதல்வராகலாம் என்கிற கனவு அவர்களுக்கெல்லாம் இல்லாமல் இராது.

இந்தத் தருணத்தில், அதாவது டிசம்பர் 24- எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், ஒரு விஷயத்தை நினைவுகூறுவதோடு, சுட்டிக்காட்டுவதும் சாலப் பொறுந்தும்.

அது, அரசியலுக்கு வரும் சினிமா நட்சத்திரங்கள் பற்றியதே!

ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் பதவியில் அமர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அரசியலில் ஈடுபடும், ஈடுபடுத்தப்படும் சினிமா நட்சத்திரங்களில் எண்ணிக்கை வெகுவாகனது.

சினிமா நடிகர் அல்லது நடிகையை பேட்டியெடுக்கச் செல்லும் நிருபர்கள் சிலர், 'நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?' என்ற கேள்வியை தவிர்த்தாலே... பலருக்கும் அரசியல் எண்ணம் குறையும் என்பது நையாண்டியாளர்களின் கருத்து!

அரசியலுக்கு வரும் நட்சத்திரங்களில் பலரும் மேடையில் முதலில் உதிர்க்கும் சொல் 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்...'

இதில், தவறேதும் இல்லை..!

ஆனால், எம்.ஜி.ஆர். பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றாமல் போனாலும் கூட அடிப்படையான ஒரு விஷயத்தைப் பின்பற்றினாலே, அடுத்தடுத்து சமூக வாழ்வில் தேர்ச்சி வந்துவிடக்கூடும்.

அதுதான் மனித நேயம்... எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அசைவுகளிலும், புரிகின்ற ஒவ்வொரு காரியங்களிலும், அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களிலும் மனிதே நேயம் என்பது பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும்.

ஓர் அரசியல் தலைவருக்கு வேண்டியும் முழுமுதற் தகுதியே மனித நேயம் என்பது.

இந்தத் தகுதி இருந்ததால் தான் எம்.ஜி.ஆரால் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வராக முடிந்தது. இல்லையேல், இரண்டாவது முறை அவரை மக்கள் முதல்வராக்கியிருக்க மாட்டார்கள்.

வசீகரம் வெறும் முகவரியே... மனிதத்துடன் கூடிய ஆட்சியே மக்களுக்கு வேண்டியது!

Article from : http://www.nigazhvugal.com/index.php?option=com_content&view=article&id=580:2008-12-23-19-37-45&catid=18:manitham&Itemid=24

Friday, April 10, 2009

எதிர்மறையான விமர்சனங்களை கையாளுவது எப்படி?

அன்றாட வாழ்வில் நாம் பல தர பட்ட விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். சில விமர்சனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. சில விமர்சனங்கள் மனதில் காயத்தை உண்டாக்குகின்றன. சில விமர்சனங்கள் கோபத்தையும் விரோதத்தையும் வளர்க்கின்றன. விமர்சனங்களை சரியாக கையாளும் போது, அவற்றின் எதிர்மறையான பாதிப்பிலிருந்து நாம் தப்பிப்பதோடு, அவற்றை நம் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். (சொந்த வாழ்வில்) வெற்றி பெற்றவர்களான அரசியல் வாதிகள், சினிமா ஹீரோக்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்கள் தம்மைப் பற்றி எழும் விமர்சனங்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதை கண்கூடாக பார்க்க முடியும். எதிர்மறை விமர்சனங்களை எப்படி சிறப்பாக எதிர்கொள்வது என்பது பற்றி இங்கு விவாதிப்போம்.

விமர்சனங்களுக்கான களங்களையும் காரணங்களையும் அடிப்படையாக கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

முதல் வகை காற்று வாக்கிலான விமர்சனங்கள். இவை பெரும்பாலும் விமர்சிப்பவரின் அறியாமையினாலேயே (இயந்திரகதியில்) எழுப்பப் படுகின்றன. இந்த குறிப்பிட்ட வகை விமர்சனங்களால் (இரு தரப்பிற்கும்) பயன்கள் எதுவுமில்லை என்றாலும் ஏதோ விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவை எழுப்பப் படுகின்றன. இந்த வகை விமர்சகர்கள், தன்னை/ சொந்த குடும்பத்தை/ வேலையை சரியாக கவனிக்காமல், உலகையே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஐந்து நிமிட மின்வெட்டிற்கு உள்ளூர் மின் பணியாளர் முதல் முதலமைச்சர் வரை எல்லாரோரையும் திட்டித் தீர்த்து விடுவார்கள். பிரச்சினை இவர்கள் வீட்டு மின் இணைப்பில்தான் என்றால், உடனடியாக சரி செய்ய சோம்பேறித்தனப் படுவார்கள். இவர்களின் விமர்சனங்களில் அபூர்வமாக ஏதாவது நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும் என்றாலும், இவர்களது விமர்சனங்களை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விடுவது நம் நேரத்தை மிச்சப் படுத்தும். இவர்களுக்கு நம் பதில் மெல்லிய புன்னகை மட்டுமே.

இரண்டாம் வகை விமர்சனங்கள் கவனிக்க வேண்டியவை. எளிதில் புறந்தள்ள முடியாதவை. இந்த விமர்சனங்களின் நோக்கங்கள் உள்ளே ஒளிந்திருக்கும். இவை பெரும்பாலும் நமக்கு அருகிலிருப்பவர்களாலேயே எழுப்பப் படும். விமர்சிக்கப் படுபவரின் கவனைத்தை தன் பக்கம் ஈர்ப்பது அல்லது அவரை காயப் படுத்துவதுதான் இந்த வகை விமர்சனங்களின் நோக்கங்கள். ஒருவரது உடல்ரீதியான பிரச்சினைகள், சாதி, மதம், ஏழ்மை, கல்வி இன்மை (அல்லது குறைவு), வேறு ஏதாவது குறைபாடு ஆகியவற்றை மறைமுகமாக விமர்சித்து அவரை காயப் படுத்த விரும்பும் ஒரு சிலர் உங்கள் அருகே எப்போதும் இருக்கிறார்கள். உதாரணங்கள்: "உங்கள் குடும்பத்திலேயே இந்த வழக்கம் இருக்காது." " எனக்கு அப்போதே சந்தேகம். உங்களால் முடியுமா என்று?" நம்மை காயப் படுத்த வரும் இந்த விமர்சனங்களை நாம் இதயத்திற்கு கொண்டு சென்றால் அது விமர்சித்தவருக்கு வெற்றியாகி விடும். எனவே, இந்த வகை எதிர்மறை விமர்சனங்களை, புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் பொருட்படுத்தவே கூடாது. இவர்களுக்கு நம் பதில், "நான் உங்களால் துளியும் காயப் பட வில்லை" என்பதை செய்கைகளால் உணர்த்துவது.

அதே போல உறவுகளில் (நட்புகளில்) விரிசல் வரும் போது, அதை மறைமுகமாக வெளிபடுத்துபவர்கள் இருக்கிறார்கள். உதாரணம்: "நீங்கள் ரொம்ப பிசி போல தெரிகிறது?" இங்கும் கூட விமர்சனங்களின் வெளிப் பொருளைப் பற்றி கவலைப் படாமல், உறவுகளின் (நட்புகளில்) விரிசலை சரி செய்யவே முயல வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "கவலைப் படாதீர்கள் உங்களுடன் நான் இருக்கிறேன்" என்று செய்கைகளால் உணர்த்துவது.

மூன்றாம் வகை விமர்சனங்கள் நம்மீது உள்ள அக்கறையால் நமது நலம் விரும்பிகளால் வெளிப்படுத்தப் படுபவை. இந்த வகை விமர்சனங்கள் சமயத்தில் காராசாரமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த விமர்சனங்களின் மீது எந்த வகையிலும் நம்முடைய அதிருப்தியை வெளியிடக் கூடாது. அது நமது நலம் விரும்பிகளை காயப் படுத்தி விட வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த முறை அவர்கள் விமர்சனங்களை வெளியிடாமல் கூட இருந்து விடலாம். அது நமக்குத்தான் நஷ்டம். இங்கு, விமர்சனம் வெளிப்படுத்தப் பட்ட விதம் பற்றி கவலைப் படாமல், அதில் உள்ள அக்கறையை புரிந்து கொண்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நம் பதில், "உள்ளார்ந்த நன்றி".

கடைசியாக எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி எனது தனிப் பட்ட அனுபவத்தில் இருந்து ஒரு சிறிய உதாரணம்.

தனக்குக் கீழே உள்ள அலுவலர்களின் பணியினை பற்றி கன்னாபின்னாவென்று விமர்சிக்கும் பழக்கம் கொண்ட ஒரு மேலதிகாரி விடுப்பிலிருந்து திரும்பி வருவதற்கு சற்று முன்பு, அவர் பெயர் சொல்லி பயமுறுத்திய ஒரு இடைநிலை அதிகாரிக்கு ஒரு இளநிலை அலுவலர் அளித்த பதில்.

"ஐயா! குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் கடுமையாக விமர்சிப்பது அவருக்கு (மேல் நிலை அதிகாரி) அதிகாரம் கொடுத்த உரிமை. இளநிலை அதிகாரி என்ற முறையில் அந்த விமர்சனத்தை சகித்துக் கொள்வதும் அவருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் என்னுடைய கடமை. அதே சமயம், கொடுத்த பணியினை சிறப்பாக செய்ய வேண்டியது மட்டுமே எனது பொறுப்பு. அவரது தனிப்பட்ட (அலுவலக) குணாதிசியங்களைப் பற்றி கவலைப் (அச்சப்) படத்தான் வேண்டுமா என்று முடிவு செய்வது எனது தனிப் பட்ட உரிமை."

Article from : http://sandhainilavaram.blogspot.com/2009/03/blog-post_06.html