Thursday, March 19, 2009

சலியாத மனமே அழியாத சொத்து

"கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை" என்று கவிஞர் சுரதா கூறியதுபோல, இன்றும் அதிகாலை எழுந்து நள்ளிரவு வரை உழைக்கின்ற தலைவர் கலைஞரின் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நான்கு கூறுகள் குறித்து இதுவரை கூறினேன். கூர்த்த மதி, கூடுதலான உழைப்பு, நெஞ்சு உரம், நிருவாகத் திறன் எனப்படும் அந்நான்கு கூறுகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளையும் நாம் பார்த்தோம். ஆனால் அவற்றையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதாய்ப் படுகின்றது.

"சலிப்படைவது" என்னும் குணம், எந்த ஒரு மனிதனுக்கும் இயல்பானது. சலிக்கும் கால அளவு, ஆளுக்கு ஆள் மாறுபடலாம். ஆனாலும் எதன் மீதும் நமக்குச் சலிப்பு வந்தே தீரும். நமக்கு மட்டுமல்ல, மாபெரும் தலைவர்களுக்கும், போர் வீரர்களுக்கும் கூடச் சில நேரங்களில் சலிப்பு வந்து விடும். எண்பதுக்கும் மேற்பட்ட போர்க்களங்களைக் கண்ட நெப்போலியனுக்குக் கூட, ஒரு கட்டத்தில் போர் சலித்தது. செயின்ட் ஹெலினா தீவிலிருந்து (சிறை) தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் அந்தச் சலிப்பை நாம் பார்க்க முடிகிறது.

அரும்பெரும் தியாகங்களை எல்லாம் செய்து, நாட்டின் விடுதலைக்காய்த் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அரிய தலைவர் வ.உ.சி.க்குக் கூட, இறுதி நாள்களில் அரசியல் சலித்தது, இலக்கியம் நோக்கிச் சென்றார். சிறுகதை மன்னன் என்று அறியப்படும் ஜெயகாந்தன் அண்மையில் எழுதிய சிறுகதை எதையும் காண முடியவில்லை. ஜெயகாந்தனுக்குச் சிறுகதை சலித்திருக்கலாம். ஆனால், 85 வயதான பின்னும், அரசியல் சலிக்கவில்லை, இலக்கியம் சலிக்கவில்லை, சமூகச் சிந்தனை சலிக்கவில்லை. இப்படி ஒரு மனிதர் நம்மிடையே உண்டென்றால், அவர் கலைஞர்தான்.

இயல்பாகக் குழந்தைகள்தான் எதிலும் சலிப்படையாமல் இருப்பார்கள். ஒரே விளையாட்டைப் பலமுறை திருப்பித் திருப்பி விளையாடுவார்கள். சலிக்காது. வயது ஏற ஏற, சலிப்படையும் மனமும் வளர்ச்சியடைகிறது. ஆனால் கலைஞரோ விதிவிலக்காக இருக்கிறார். அரசியலில் ஆயிரம் நெருக்கடிகள், நடக்கவே சிரமப்படும் உடல் என எல்லாச் சிக்கல்களுக்கு மிடையில், நாள்தோறும் அவர் எழுத்திலும், பேச்சிலும் காணப்படும் நக்கல், கேலி நையாண்டிகள் எதைக் காட்டுகின்றன. சலியாத மனம் ஒன்று, அவரிடம் அழியாத சொத்தாக உள்ளது என்பதைத்தானே! அந்த மனம்தான் அவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்று நமக்குத் தோன்றுகிறது. அந்த குணம், அய்யா பெரியாரிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

(16.09.08 - சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து)

Article from : http://subavee.wordpress.com/2008/11/10/oct08/

No comments:

Post a Comment