நம் வாழ்க்கையில் எத்தனோ நினைவுகள் தொலந்து போயிருக்கும். தேடித் தேடி ஓடினாலும் கிடைக்காது. எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் அதை திரும்ப பெற இயலாது. அந்தக் கால வாழ்க்கையை அனுபவிக்காத இன்றைய நகரவாசிகள் அதிர்ஷ்டமில்லாதவர்கள். இளவயது வாழ்க்கை, நண்பர்கள், விவரம் தெரியாதக் காதல், செல்போன் நச்சரிப்பு இல்லாத அந்த நாள்... திரும்பிவராது... வரவே வராது. அது போன்ற பழைய நினைவுகளை அசைபோடுவது தான் இந்த நினைவுகள்.
18 ஜூலை 1986-சினிமா உலகம் நிச்சயம் எதிர்பார்த்திருக்காது இப்படி ஒரு வாழ்க்கை, படமாக பாடமாக வருமென்று. A.V.M தயாரிப்பில் விசுவின் கதை வசண இயக்கத்தில் வளிவந்த குடும்பக் காவியம் சம்சாரம் அது மின்சாரம்.
அம்மையப்ப முதலியார் கோதாவரி என்ற அழகு குடும்பத்தில் இருந்து துவங்குகிறது காவியம். விசு,கமலா காமேஷ். அவர்களுக்கு 4 பிள்ளைகளாக ரகுவரன், சந்திரசேகர், காஜாசெரீப், லலிதா.
ரகுவரனின் மனைவியாக லட்சுமி. மகிழ்சியாக போய்க்கொண்டிருக்கும் குடும்படுத்தில் விசுவின் மகள் ரூபத்தில் புயல் வீச ஆரம்பிக்கிறது. விசுவின் மகள் ஒரு கிருத்தவ பையனை (திலீப்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் சோர்ந்து போகும் விசு, டெல்லிகணேசின் மகள் மாதுரியைத் தன் மகன் சந்திரசேகருக்கு திருமணம் செய்து வைக்கிறார். அந்த நேரத்தில் லட்சுமி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் செல்ல பிரச்சிணை வெடிக்கிறது. ரகுவரனோடு ஏற்படும் மோதலில் வீடு இரண்டாகப் பிரிக்கப் பட்டு நடுவே கோடு போடப்படுகிறது. இந்த நிலையில் வாழப்போன மகள் வாழா வெட்டியாக வீட்டிற்குத் திரும்பிவருகிறார். அதே நேரம் பிரசவத்துக்குப் போன லெட்சுமியும் குழந்தையோடு திரும்பிவந்து தன் கணவனால் சிதறிய குடும்பத்தை ஒன்றினைக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று சுபமாகிறது.
இயக்குனர் விசு எங்கிருந்து சிந்தித்தாரோ இப்படி ஒரு குடும்பத்தை. தொழில் நுட்பங்களே தேவையில்லாத அழகு படம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. கண்ணம்மா என்ற பாத்திரத்தில் வீட்டு வேலைக்காரியாக நடித்த மனோரமா கணகச்சிதம். அவர் வரும் "கண்ணம்மா- கம்முன்னு கெட" காட்சி அந்த காலத்தில் மிகமிக ரசிக்கப்பட்டது. அவரோடு போட்டி போட்டி மோதும் ஆல்பர்ட் பெர்னான்டஸ் ஆக கிஷ்மு. தன் மருமகளிடம் ஓரளவிற்காவது கண்ணியத்தை எதிர்பார்க்கும் மாமனாராக நடித்திருந்தார். சிவா என்ற கேரக்டரில் அடக்கமான நடிப்பில் சந்திரசேகரும் அசத்தியிருந்தார். குடும்ப மருமகளாக வாழ்ந்தேயிருந்தார் லெட்சுமி. பிரிந்து போன குடும்பத்தை ஒன்றினைக்க இவர் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் அருமை. மக்களால் மிகமிக ரசிக்கப்பட்டன. படத்தின் மிக முக்கியமான உயிரோட்டமே ரகுவரன் தான்.
சிதம்பரம் என்ற பாத்திரத்தில் அலப்பறை கொடுத்திருந்தார். ஒரு காட்சியில்
விசு: " நம்ம குடும்பம் என்ற கப்பல் மூழ்கிகிட்டு இருக்குப்பா"
ரகு : "அப்டின்னா கடல்ல குதிச்சி தப்பிக்க வேண்டியது தானே"
விசு: "எப்டிப்பா முடியும் நான் இந்த கப்பலோட கேப்டன்"
ரகு : "ஆனா நான் சாதரண பயணி,எனக்கு நீச்சலும் தெரியும்" என்பார்.
இது போன்ற வசனங்கள் இன்றெல்லாம் எங்குமே காணமுடியாது. சங்கர் கனேஷ் இசையில் அனைத்துப் பாடல்களுமே பிரபலம். குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், ஜானகிதேவி, ஊரத்தெரிஞ்சிகிட்டேன் பாடல்கள் ஒலிக்காத இல்லங்களே இல்லையெனலாம். அன்றைக்கு திரைவிமர்சனங்கள், தனியார் தொலைக்காட்சி டிரைலர்கள் போன்ற எந்த விளம்பரங்களும் இல்லாமலேயே இந்தப் படம் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் கதை வசண ஆடியோ கேசட்கள் 2 லட்சம் விற்றுத்தீர்ந்தாக சொல்லி நினைவிருக்கிறது. சென்னையில் தேவி தியேட்டரில் ஓடியதாக நினைக்கிறேன். தயவு செய்து சென்னைவாசிகள் யாராவது இதை உறுதிப் படுத்தவும்.
-ராயப்பேட்டை ராமு
Article from : http://kaludai.blogspot.com/2009/03/blog-post_5122.html

No comments:
Post a Comment