Saturday, March 21, 2009

மோகம் 30 நாள்.!

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(குறள் : 1092)

என்ன சொல்கிறது வள்ளுவம்? தலைவன் அறியாமல் அவனை விழுங்கும் தலைவியின் சிறு பார்வை மட்டுமே காமத்தின் பாதியளவு கூட இல்லை.. அதை விடவும் பெரிது என்கிறது. வெறும் பார்வைக்கு மட்டுமே இவ்வளவு எனில்.. அடுத்து.. அதற்கடுத்து.. எவ்வளவு பெரிய விஷயம் இது.!

"இத்தப்போயி எவண்டா 30 நாள்னு சொல்லிக்கினான்? கையில கெடச்சான்னா தாராந்துடுவான் மவனே.?"

"லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு பாக்குணும்.. ஏதா பொடி வெச்சி சொல்லிட்டிருப்பானுங்கோ.." என்று கண்ணன் என்னை அமைதிப்படுத்தினான்.

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த போது 270யை தாண்டிக்கொண்டிருந்த கண்ணனின் சொற்பொழிவு இதோ..

"மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.. நுப்பதாவது நாளே உண்டாயிட்டான்னு வெச்சுக்கோ.. போச்சா.. அப்பாலிக்கு டாக்டரு, டெஸ்ட்டுக்குன்னு அலைவியா? அவன் முத மூணு மாசம் வாணாம், கடேசி மூணு மாசம் வாணாம்பானா? நடுவாலிக்கா நீயே பக்கத்துல போக மாட்டியா.. புள்ள பொறந்தப்பொறவு எவுனும் சொல்லாமலே மூணு மாசம் போ மாட்டியா? அப்பாலிக்கா ரெண்டாவுது இப்ப வாணானு அவ சொல்லுவாளா.? அப்போ அதச்செய்யி, இதச்செய்யாத, அதப்பண்ணு, இதப்பண்ணாத ஒரு பெரிய லிஸ்டே இருக்குமா? என்னத்த.. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போயிருமா? இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? எல்லாம் முடிஞ்சு பாக்கும் போது நீ ஓஞ்சி போயிடுவயா? இப்ப கணக்குப் பாரு.. எவ்ளோ நாளு.. அந்த முத முப்பது நாளுதானே.. அதான் மோகம் நுப்பது நாளு.. அதுனால ‘போனா வராது, விடிஞ்சா இருக்காது.’ கவனமா இருந்துக்கோ.. அப்பயே ஜாலி பண்ணிக்கோன்றேன் நா.. இப்டிதான் நா திங்க் பண்ணிகினுருக்கேன்.. நீ இன்னா சொல்ற.?"

விட்டால் ஆன்மீக உரையைத் தொடரக்கூடும் என்பதால் கைத்தாங்கலாக அவனை படுக்க வைத்துவிட்டு நானும் சோபாவிலேயே சரிந்தேன்..

இவன் கூறும் நாள்கணக்குதான் அந்த பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறது. எனினும் இன்னொரு கோணமும் இருக்கிறது. அது "தேவை" என்ற பசி நோக்கில் மட்டுமே இருக்குமானால் முப்பது நாளென்ன, மூன்றே நாட்களில் கூட வடிந்துபோகலாம். ஆனால் "பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்" என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே..

ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன்.

Article from : http://thamira-pulampalkal.blogspot.com/2009/03/30.html

No comments:

Post a Comment